Devon Conway : 'கண்டா வரச் சொல்லுங்க!' - கான்வே ஏன் CSK க்கு முக்கியம் தெரியுமா?

8 months ago 8
ARTICLE AD BOX

'கண்டா வரச் சொல்லுங்க!'

சென்னை அணி ஆடியிருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றிருக்கிறது. இன்று டெல்லிக்கு எதிராக மோதுகிறது. டெவான் கான்வேயை ஏன் லெவனில் எடுக்காமல் விடுகிறீர்கள் என்பதே சென்னை ரசிகர்களின் ஒருமித்த மனக்குமுறலாக இருக்கிறது. 'கண்டா வரச் சொல்லுங்க...' என்கிற அவர்களின் ஆதங்கத்தில் நியாயமும் இருக்கிறது.

கான்வேகான்வே

டெவான் கான்வே சென்னை அணியின் முக்கிய அங்கமாக இருந்தவர். அவர் ப்ளேயிங் லெவனில் முதல் வாய்ப்பாக பார்க்காமல் இருப்பதே குற்றம்தான். சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் கான்வே ஏன் கட்டாயம் இடம்பெற வேண்டும்? அவரின் முக்கியத்துவம் என்ன?

'சென்னையின் பாரம்பரியம்!'

சென்னை அணிக்கென ஒரு பாரம்பரியம் இருக்கிறது. ஐ.பி.எல் இன் தொடக்கக் காலத்திலிருந்தே ஒரு ஒரு இந்திய ஓப்பனரையும் ஒரு வெளிநாட்டு ஓப்பனரையும் இணைத்துதான் ஓப்பனிங் கூட்டணியை உருவாக்கி வைத்திருக்கின்றனர். சில சமயங்களில் இரண்டு வெளிநாட்டு ஓப்பனர்களும் இறங்கியிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான சமயங்களில் ஒரு இந்திய ஓப்பனர் + ஒரு வெளிநாட்டு ஓப்பனர் என்பதுதான் சென்னை அணியின் வெற்றி ஃபார்முலாவாக இருந்திருக்கிறது.

முரளி விஜய்முரளி விஜய்

2010, 2011, 2018, 2021, 2023 இந்த 5 சீசன்களில்தான் சென்னை அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்த 5 சீசன்களிலுமே ஒரு இந்திய வீரர் ஒரு வெளிநாட்டு வீரர் என்றே சென்னை அணி ஓப்பனிங் கூட்டணியை வடிவமைத்திருக்கும்.

'ஓப்பனிங கூட்டணி ரெக்கார்ட்!'

2010 இல் சென்னை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றபோது அந்த சீசனில் விஜய்யும் ஹேடனும் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இருவரும் அந்த சீசனில் 804 ரன்களை எடுத்திருந்தனர். நல்ல ஓப்பனிங் கூட்டணி. இவர்களோடு நம்பர் 3 இல் ரெய்னாவும் கலக்க, அந்த சீசனை சென்னை வென்றது. சென்னை அணி 2011 இல் சாம்பியனான போதும் விஜய்யும் மைக் ஹஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கியிருப்பார்கள். அந்த சீசனில் இருவரும் 926 ரன்களை எடுத்திருந்தனர்.

HusseyHussey

முதலில் அந்த சீசனில் அனிருதா ஸ்ரீகாந்த்தையும் விஜய்யையும்தான் ஓப்பனிங் இறக்கியிருப்பார்கள். அது செட் ஆகாமல் போகவே அப்போதுதான் ஹஸ்ஸியையும் விஜய்யையும் ஓப்பனிங் கூட்டணியாக மாற்றியிருப்பார்கள்.

சென்னை அணி கம்பேக் கொடுத்து சாம்பியன் ஆன 2018 சீசனில் வாட்சனும் ருத்துராஜூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இருவருக்குமே மிரட்டலான சீசன் அது. இருவரும் சேர்ந்து 1157 ரன்களை அடித்திருந்தனர்.

Faf Du PlessisFaf du plessis

2021 சீசனில் டூப்ளெஸ்சிஸூம் ருத்துவும் ஓப்பனிங் இறங்கினார்கள்..இது அவர்களின் சீசன். ஆரஞ்சு தொப்பிக்கு இருவரும் போட்டி போட்டு சீசனின் சிறந்த ஓப்பனிங் கூட்டணியாக இருந்தனர். இருவரும் ஒருசேர 1268 ரன்களை சேர்த்திருந்தனர்.

'கான்வே - சிஎஸ்கே பின்னணி!'

ஒரு இந்திய பேட்டர் + ஒரு வெளிநாட்டு பேட்டர் என ஓப்பனிங் கூட்டணியை உருவாக்கி, அவர்கள் அந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடுவதுதான் சென்னை அணியின் வெற்றி ரகசியம். இந்த பாரம்பரியத்தில் இயல்பாக வந்து பொருந்தியவர் டெவான் கான்வே. டூப்ளெஸ்சிஸ் ஆர்சிபிக்கு போன பிறகு இங்கே அந்த ஓப்பனிங் இடத்தை யார் நிரப்பப்போகிறார் எனும் கேள்வி வந்தவுடன் தாமதமே இல்லாமல் அந்த இடத்தில் வந்து நின்றவர் டெவான் கான்வே. தென்னாப்பிரிக்காவில் பிறந்து கிரிக்கெட் வாய்ப்புக்காக நியூசிலாந்தில் குடியேறி அங்கே பார்மட் வித்தியாசம் இல்லாமல் எல்லா பார்மட்டிலும் சிறப்பாக ஆடித்தான் நியூசிலாந்து அணியில் வாய்ப்பைப் பெற்றார்.

Devon ConwayDevon Conway

நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் அவர் அறிமுகமான போட்டி இன்னும் நினைவில் இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டைச் சதத்தோடு அசத்தலான அறிமுகம் அது. அதன்பிறகுதான் சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்கி அணிக்குள் கொண்டு வந்தது. 2022 சீசனில் 7 போட்டிகளில் மட்டும்தான் இறங்கியிருந்தார். அதிலேயே நல்ல திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்துதான் 2023 சீசன் முழுவதும் கான்வே ருத்துராஜூடன் ஓப்பனிங் இறங்கினார்.

அணியில் நிறைய ஓட்டைகள் இருந்தும் அந்த சீசனை சென்னை அணி வென்றதற்கு மிக முக்கிய காரணமே ருத்துராஜ், கான்வே கூட்டணிதான். இருவரும் ஒருசேர 1262 ரன்களை அடித்திருந்தனர். ருத்துராஜை விட கான்வே நன்றாக ஆடியிருந்தார். ருத்துராஜ் 590 ரன்களையும் கான்வே 672 ரன்களையும் அடித்திருந்தார். சென்னை 5 வது முறையாக சாம்பியன் ஆனது.

Ruturaj + ConwayRuturaj + Conway

கடந்த சீசனில் கான்வேக்கு காயம். இதனால் சீசன் முழுவதையுமே தவறவிட்டார். ரச்சின் - ரஹானே, ரச்சின் - ருத்துராஜ் என ஓப்பனிங் கூட்டணி மாறி மாறி இறங்கியது. ஓப்பனிங் செட் ஆகவில்லை. சென்னை அணி ப்ளே ஆப்ஸ் கூட செல்லவில்லை.

ஆக, ஓப்பனிங் கூட்டணி செட் ஆனால் மட்டும்தான் சென்னை அணி நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். ருத்துராஜ் நம்பர் 3 இல்தான் இறங்கப்போவதாக ஏல சமயத்திலேயே முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார். நிச்சயமாக அது மோசமான முடிவுதான்.

அவர் ஓப்பனிங் இறங்கினால்தான் அவருக்கும் நல்லது, அணிக்கும் நல்லது. ருத்துராஜூம் ஓப்பனிங் வர வேண்டும். அவருடன் கூட்டாளியாக கான்வே வர வேண்டும். இதுதான் சென்னை அணியின் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

ConwayConway

அதேமாதிரி, ருத்துராஜ் ஓப்பனிங் இறங்கவில்லை என்பதற்காக கான்வேயை ட்ராப் செய்ததும் அநியாயமான முடிவுதான். டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் ருத்துராஜ் ஆடுவது சந்தேகம் என்பதால் கான்வேதான் ஓப்பனிங் வருவார். அடுத்த போட்டியில் ருத்துராஜ் குணமாகி வந்தாலும் கான்வேயை லெவனிலிருந்து நகர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முடிவாகவே அது இருக்கும்.

Read Entire Article