DNA Review: க்ரைம் த்ரில்லரில் ஆக்ஷன் மோடில் அதர்வா, பர்ஃபாமன்ஸ் மோடில் நிமிஷா சஜயன்!

6 months ago 7
ARTICLE AD BOX

காதல் தோல்வியால் மனமுடைந்து, மது போதைக்கு அடிமையாகும் இளைஞன் ஆனந்த் (அதர்வா). 'Borderline Personality Disorder' என்ற பிரச்னையால் திருமணமாகாமல் இருக்கும் இளம்பெண் திவ்யா (நிமிஷா சஜயன்).

இந்த இரு வீட்டாரின் குடும்பங்களும் அவர்களைப் புறக்கணிக்கும் சூழலில், சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் திருமணப் பந்தத்தில் இணைகிறார்கள்.

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. மயக்க நிலையிலிருந்து கண் விழித்து குழந்தையை வாங்கும் திவ்யா, அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். நிஜமாகவே பிறந்த குழந்தை மாற்றப்பட்டதா, இதன் பின்னிருக்கும் உண்மை என்ன என்பதற்கு விடை காணும் க்ரைம் த்ரில்லர் படமே இந்த ‘DNA’.

DNA Review | டிஎன்ஏ விமர்சனம்DNA Review | டிஎன்ஏ விமர்சனம்

ஆனந்தாக அதர்வா, தன் எமோஷனல் பயணத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் சில இடங்களில் சற்றே தடுமாற்றம் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு நிமிர வைக்கிறது.

இருப்பினும், ஹவுசிங் போர்டு காட்சிக்குப் பின் நிமிஷாவை ஆற்றுப்படுத்தும் இடத்தில் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு வெளிப்படும் ஒரு தாயின் உணர்ச்சி வெள்ளம், குழந்தையைக் காணவில்லை என்கிற ஏக்கம், வேறொருவரின் பிள்ளை என்றாலும் ‘பட்டூ பட்டூ’ என்று மீண்டும் மீண்டும் சொல்லி உடைகிற ‘தாய்மை’ என்பதாக நடிப்பிலும் ‘கெட்டிக்காரப் பட்டு’ எனப் பெயர் வாங்குகிறார் நிமிஷா.

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?

எஸ்.ஐ.யாக வரும் பாலாஜி சக்திவேல், உதவ வேண்டும் என்ற மனிதநேயம் கொண்ட கதாபாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பவர், ‘போனில் நொடிகளை ஓடவிடும்’ விசாரணைக் காட்சிகளில் கைதட்டல்களை வாங்குகிறார்.

இவர்கள்தவிர, பாட்டியாக வரும் சாத்தூர் விஜயலட்சுமி, ரமேஷ் திலக், சேத்தன், விஜி ஆகியோரின் பங்களிப்பும் நிறைவு!

ஒரு கட்டைப்பை, அதைத் தூக்கிச் செல்லும் ஒரு பாட்டி, அதற்குள் குழந்தை என்ற மூன்று விஷயங்களை வைத்து, ஒரு பேய்ப் படத்தின் பதற்றத்தை ஆக்கத்தில் கொண்டுவந்திருக்கிறது தொழில்நுட்பக் குழு.

DNA Review | டிஎன்ஏ விமர்சனம்DNA Review | டிஎன்ஏ விமர்சனம்

இதில் ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை, குழந்தையின் இதயத் துடிப்பைப் போலப் பதற வைக்கிறது என்றால், பார்த்திபனின் ஒளிப்பதிவு, வி.ஜே.சபு ஜோசப்பின் படத்தொகுப்பும் குழந்தையைப் பின்தொடர வைக்கின்றன.

காட்சி உருவாக்கத்தில் க்ரைம் உலகை இரவில் கட்டமைக்க, பார்த்திபனின் கேமரா பெரிதும் உதவியிருக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தில் படத்தொகுப்பாளர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஐந்து இசையமைப்பாளர்களின் பாடல்களும் படத்திற்குப் பெரிய அளவில் உதவவில்லை.

DNA: "பரியேறும் பெருமாள் கதையை முதல்ல அதர்வாகிட்ட சொன்னேன்; அப்போ ஃபீல் பண்ணேன்" - மாரி செல்வராஜ்

ஆனந்த்தின் மது போதை, திவ்யாவின் மனநலப் பிரச்னை என்று துவக்கக் காட்சிகள் சற்று நீளமாகவும், பார்த்துப் பழகியதாகவும் இருக்கின்றன. ஆனால், அதன் பின்னர் வரும் திருப்புமுனைக்குப் பிறகு படம் வேகமெடுக்கிறது.

அதிலும், க்ரைம் த்ரில்லரை உணர்ச்சிகரமான தளத்தில் அணுகியிருக்கும் நெல்சன் வெங்கடேசனின் திரைக்கதை, படத்தோடு நம்மைக் கட்டிப்போடுகிறது.

குற்றப் பின்னணியை விவரிக்கும் சிசிடிவி காட்சிக்கான இடமும், நரபலி தொடர்பான தேடல் படலமும் அட்டகாசம்.

DNA Review | டிஎன்ஏ விமர்சனம்DNA Review | டிஎன்ஏ விமர்சனம்

கட்டைப்பையோடு சுற்றும் பாட்டி, பதற்ற மூட்டைகளை நம் மனதிலும் ஏற்றி விடுகிறார். இவையெல்லாம் சேர்ந்து, முதல் பாதி நம் மனதைக் கனமாக்குகிறது.

இதன் பின்னர், க்ரைமின் அடிப்படையை ஆராய்ந்து, பரபரப்பைத் தக்க வைக்க வேண்டிய இரண்டாம் பாதி, ஆரம்பத்தில் அதைச் செவ்வனே செய்தாலும், ஒரு சண்டை, ஒரு பாடல், இத்தியாதி எனக் காட்சிகளில் சுவாரஸ்யத்தைச் சற்றே தொலைத்துவிடுகிறது.

அதேபோல் படம் ஆரம்பிக்கும் ‘பார்’ பாடல், இரண்டாம் பாதியில் ஒரு ‘கிளாமர்’ பாடல் என இவை இரண்டும் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர்கள்.

DNA Movie Exclusive: புறக்கணிக்கப்பட்டவர்களாக வரும் அதர்வா, நிமிஷா! - இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்

ஒரு டிராமாவுக்குத் தகுந்த பல குடும்பக் கதாபாத்திரங்கள் இருந்தும், ‘அவர்கள் யாரையும் காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு இரண்டாம் பாதியில் எல்லோரும் மாயமாகிறார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் ஒரே கோயிலுக்கு வருவது ‘அதெப்படி திமிங்கலம்’ என்று லாஜிக் ஓட்டையாகி, த்ரில்லரின் தீவிரத்தைக் குறைக்கிறது.

DNA Review | டிஎன்ஏ விமர்சனம்DNA Review | டிஎன்ஏ விமர்சனம்

ஆரம்பத்தில் சிறப்பான கதை திருப்பங்கள், தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான அனுபவம் கொடுத்திருக்கும் படம், தேவையற்ற பாடல்களை நீக்கி, க்ளைமாக்ஸ் காட்சியை இன்னுமே நியாயப்படுத்தி இருந்தால், இந்த 'DNA' பரிசோதனை இன்னுமே சாதகமான முடிவைக் கொடுத்திருக்கும்.

DNA Movie Review | Atharvaa, Nimisha Sajayan | Nelson Venkatesan | Cinema Vikatan

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article