ARTICLE AD BOX
ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளின் நிலைமை இன்று தலைகீழாக இருக்கிறது. இதில், இலங்கை அணியில், முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா அணிக்குள் பயிற்சியாளராக நுழைந்த பிறகு அந்த அணி மெல்ல மீண்டு வருகிறது. மறுபக்கம், வெஸ்ட் இன்டீஸுக்கு இரண்டு டி20 உலகக் கோப்பைகளைய் வென்று கொடுத்த டேரன் சமி, தனது அணியை பழைய நிலைக்குக் கொண்டுவர அணியின் பயிற்சியாளராகத் தீவிரச் செயல்பாட்டில் இறங்கியிருக்கிறார்.
பாகிஸ்தான்ஆனால், பாகிஸ்தானின் நிலைமை பாதாளத்தில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி கூட இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்புக்காக ஆஸ்திரேலியாவுடன் சண்டை செய்தது. ஆனால், பாகிஸ்தானோ நடப்பு சாம்பியன் என்பதற்காகவாது, சொந்த மண்ணில் நடக்கிறது என்பதற்காகவாது ஒரு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அது கூட பெறாமல் படுமோசமான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அனைவரும், தற்போதைய வீரர்களை வசைபாடித் தீர்த்தனர்.
பாகிஸ்தான்இந்த இடத்தில்தான் பாகிஸ்தானின் இத்தகைய நிலைமைக்கு, இம்ரான் கான் போன்ற போராட்டகுணமிக்க தலைவனின் இடம் அணியில் இன்னும் வெற்றிடமாக இருப்பதே காரணம் என்று தெரியவருகிறது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராஃப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா போன்ற வெற்றிகளை குவிக்கக் கூடிய வீரர்கள் இருந்தும் அவர்களை ஒருங்கிணைக்கூடிய சரியான தலைவன் அணியில் இல்லை. ஆனால், தலைவனை உருவாக்கவெல்லாம் முடியாது... தலைவன் என்பவன் மண்ணில் விழுந்த விதைபோல தானாக தலையெடுப்பான்... அத்தகைய தலைவன்தான் இம்ரான் கான்.
உலகத் தர பவுலர்களுக்கு போட்டியாக ஆசியாவில் உதித்த நாயகன்!
1952 அக்டோபர் 5-ம் தேதி லாகூரில் பிறந்த இம்ரான் கான், சரியாக 1971-ல் தன்னுடைய 19-வது வயதில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அடுத்த மூன்றாவது ஆண்டில் (1974) அதே இங்கிலாந்துக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மித வேகப்பந்துவீச்சாளராக தனது கரியரை ஆரம்பித்த இம்ரான் கான், பின்னர் கடுமையாக உழைத்து தனது பவுலிங் ஆக்ஷனை மாற்றி வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.
இம்ரான் கான்தொடர் பயிற்சியின் மூலம், பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் ஜாம்பவான் ஆனார். பின்னாளில், இந்த ரிவர்ஸ் ஸ்விங் டெக்னிக்கை தான் கண்டெடுத்த வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு அப்படியே கைமாற்றினார். அந்த இருவரும் செய்தததெல்லாம் தனி வரலாறு. சரி இங்கு, இம்ரான் கானின் பெயர், 1978-ல் பெர்த்தில் நடைபெற்ற வேகப்பந்துவீச்சு போட்டியின் மூலம் கிரிக்கெட் உலகில் முதன்முதலாகக் கவனம் பெறத்தொடங்கியது.
இதில், மணிக்கு 139.7 கி.மீ வேகத்தில் பந்துவீசிய இம்ரான் கான், ஜெஃப் தாம்சன், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம் பிடித்தாலும், டென்னிஸ் லில்லீ, கார்த் லே ரோக்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ் ஆகிய லெஜண்டரி பவுலர்களை முந்தினார். 1980 முதல் 1988 வரை தனது வேகப்பந்துவீச்சு கரியரின் உச்சத்துக்கு சென்றார் இம்ரான் கான். கூடுதலாக பேட்ஸ்மேன் அவதாரமும் எடுத்து ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.
Imran Khan1979 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் ஒரு வீராகக் களமிறங்கிய இம்ரான் கான், 1983 ஒருநாள் உலகக் கோப்பையில் அதே பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்தினார். கேப்டனாக தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையிலேயே அணியை அரையிறுதிக்கு கொண்டுசென்றார். ஆனால், அந்த சமயத்தில் எல்லா அணிகளும் கண்டு மிரளும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான அந்த அரையிறுதியில் 188 ரன்களில் சுருண்டு பாகிஸ்தான் தோல்வியடைந்தது. ஆனால், அப்போட்டியில் வென்ற வெஸ்ட் இன்டீஸை பைனலில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.
``என் மனைவிக்கு மட்டும் எதாவது நடந்தால்..!" - இம்ரான் கான் பகிரங்க குற்றச்சாட்டு! அடுத்தடுத்து உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி... விரக்தியில் ஒய்வு1983 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறித் தோற்ற இம்ரான் கான், 1987 உலகக் கோப்பையில் இன்னும் தீவிரமாக இறங்கினார். அந்த உலகக் கோப்பையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்தின. பாகிஸ்தான் அணியை மீண்டும் அரையிறுதிக்கு கொண்டுவந்தார். இம்முறை பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 267 ரன்கள் குவித்தது. இம்ரான் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Imran Khanஅடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 38 ரன்களில் 3 விக்கெட்டுகளில் இழந்து தவித்தபோது ஜாவத் மியான்டட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் இம்ரான் கான். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அணியின் ஸ்கோர் 150 ரன்களை எட்டியபோது 58 ரன்னில் இம்ரான் அவுட்டானார். அங்கு விழுந்த பாகிஸ்தான் அணி முட்டி மோதி 249 ரன்கள் வரை வந்து ஆல் அவுட்டாகி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதே ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. மறுபக்கம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்ற விரக்தியில் திடீரென ஒய்வை அறிவித்தார் இம்ரான் கான்.
PAK v IND: 'இப்படியொரு மோசமான பாகிஸ்தான் அணியைப் பார்த்ததில்லை' - ஹர்பஜன் சிங் விமர்சனம்வேண்டுகோள் விடுத்த குடியரசுத் தலைவர்... களப் புலியாகத் திரும்பிய இம்ரான் கான்!இம்ரான் கான் திடீரென ஓய்வை அறிவித்தாலும், பாகிஸ்தானின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஜியா-உல்-ஹக் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் 1988 முதல் அணியை மீண்டும் வழிநடத்தத் தொடங்கினார். 1989/90-ல் முதல் ஆசிய வீரராக, `இன்டர்நெஷனல் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்' விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டு 72,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புடைய ரோவர் 827 விட்டெஸ்ஸே காரை பரிசாக வென்றார். ஆனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள், விருதுக்கு அவரை தேர்வு செய்ததை கடுமையாக விமர்சித்தன.
Imran Khanஅடுத்தநாளே, ஆஸ்திரேலியுடனான மேட்சில் அந்த அணியின் கேப்டன் ஆலன் பார்டருடன் டாஸ் போடுவதற்கு, `சாரி, நான் கார் வென்று விட்டேன்' என்ற வாசகம் பதிந்த டீ-சர்ட்டை அனித்துவந்து தக் லைஃப் கொடுத்தார் இம்ரான் கான். மேலும், கார் வென்றதன் மூலம் வந்த வருமானம் லாகூரில் தனது புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்லும் என்று அறிவித்தார். அதையடுத்து, 1992-ல் அதே ஆஸ்திரேலியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வந்தது.
Imran Khanகோப்பையை வென்றாக வேண்டும் என வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக் உள்ளிட்ட இளம் வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி களமிறங்கினார் இம்ரான் கான். ஒருவழியாகத் தடுமாறிப் போராடி பாகிஸ்தானை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு கொண்டுவந்தார் இம்ரான் கான். இம்முறை நியூசிலாந்துடன் அரையிறுதி. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. வெற்றி மட்டுமே இலக்கு என்ற நோக்கத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இன்சமாம் உல் ஹக், ஜாவத் மியான்டட் ஆகியோரின் அரைசதங்கள் மற்றும் ரமீஸ் ராஜா, இம்ரான் கானின் 40+ ரன்களால் 49 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
புலியாக விளையாடப் போகிறோம்!மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்துக்கெதிராக இறுதிப்போட்டி. இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் ஹூச் நீல நிற ஜெர்சியில் டாஸுக்கு தயாராக இருக்க, புலியின் உருவப்படம் பொறித்த வெள்ளை நிற டீ-சர்ட்டில் வந்த இம்ரான் கான், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். மேலும், புலியின் உருவப்படத்துடன் கூடிய டீ-சர்ட் அணிந்து வந்ததற்கு காரணத்தை விளக்கிய இம்ரான் கான், ``இளம் வீரர்களுடன் புலியாக விளையாடப் போகிறோம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படவில்லை." என்று கெத்தாகக் கூறினார்.
Imran Khan - Pakistanஅதன்படி, முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே முதல் விக்கெட் விழ, சர்ப்ரைஸாக ஒன் டவுனில் களமிறங்கினார் இம்ரான் கான், ஜாவத் மியான்டட்டுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார். இருவரின் அரைசதங்கள் மற்றும் வாசிம் அக்ரமின் 33 (18) குட்டி கேமியோவால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்.
Pakistan vs England - 1992 ODI world cup final250 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 227 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து தோல்வியின் விளிம்பில் நிற்க, கடைசி ஓவரை வீசிய இம்ரான் கான் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில், மிச்சமிருந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உலக அரங்கில் பாகிஸ்தானை தலைநிமிரச் செய்தார். அந்த ஆட்டத்தில், 33 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வாசிம் அக்ரம் ஆட்டநாயகன் விருது வென்றார்.
Imran Khanதங்களுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இம்ரான் கானை ஒட்டுமொத்த பாகிஸ்தானும் தலையில் வைத்துக் கொண்டாடியது. மேலும், அந்தப் போட்டியோடு மன நிறைவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இம்ரான் கானை, பின்னாளில் பாகிஸ்தான் மக்கள் பிரதமராகவும் (2018 - 2022) அரியணையில் அமர வைத்தனர்.
ரெக்கார்டஸ் இன் கிரிக்கெட்!இம்ரான் கான்பாகிஸ்தானுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் இம்ரான் கான், ஆல்ரவுண்டராக 6 சதங்கள் 3,807 ரன்களும், 362 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் (75 டெஸ்ட் போட்டிகளில்) இருக்கிறார்.
அந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரரும், உலக அளவில் நான்காவது வீரரும் இவர்தான்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 175 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 3,709 ரன்களும் 182 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
Imran Khanகேப்டனாக 48 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வழிநடத்தியிருக்கும் இம்ரான் கான், அதில் 14 போட்டிகளில் அணியை வெற்றிபெற வைத்து 26 போட்டிகளை டிரா செய்திருக்கிறார். இவரின் தலைமையில் வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது.
அதேபோல், ஒருநாள் போட்டிகளில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி மொத்தம் 139 போட்டிகளில் 77-ல் வெற்றியும், 57-ல் தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் கண்டிருக்கிறது.
Imran Khanகுறிப்பாக, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கெதிராக 15 டெஸ்ட் போட்டிகளிலும், 24 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறது. இதில், ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய வெற்றி பெறவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற, 11 டெஸ்ட் போட்டிகளில் டிராவில் முடிந்திருக்கின்றன. அதேபோல் ஒருநாள் போட்டிகளில், 4 போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றிருக்கிறது. 19 போட்டிகளில் பாகிஸ்தானே வெற்றிபெற்றிருக்கிறது. ஒரு போட்டி சமனில் முடிந்திருக்கிறது.
92 Once Again: அதே ஆஸ்திரேலியா; அதே மெல்பேர்ன்; காயம்பட்ட சிங்கமாகக் கர்ஜித்த இம்ரான் கான்!இம்ரான் கான் கண்டெடுத்த மூவேந்தர்கள்!பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கும் வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், இன்சமாம் உல் ஹக் ஆகியோரை இம்ரான் கான்தான் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். இவர்களில், வாசிம் அக்ரமும், வக்கார் யூனிஸும் பவுலிங்கில் இம்ரான் கானின் லெகஸியை அச்சுப் பிசிராமல், ஏன் அவரையும் ஓவர்டேக் செய்தனர்.
wasim akramவாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஜோடியின் பேஸ் அண்ட் ஸ்விங் பவுலிங்கில் திணறாத அணிகளே இல்லை. ஒருநாள் போட்டிகளில் முதல் ஆளாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம்தான். மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 502 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் இரண்டாவது இடத்திலும், 416 விக்கெட்டுகளுடன் வக்கார் யூனிஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில், வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளும், வக்கார் யூனிஸ் 373 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கின்றனர்.
Waqar Younisஅதேபோல், பேட்டிங்கில் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் இதுவரை யாரும் கண்டிராத பேட்ஸ்மேனாக சாதனை மேல் சாதனைகள் குவித்தார். மொத்தம் 378 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள், 83 அரைசதங்கள் என 11,739 ரன்களைக் குவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்குப் பிறகு இரண்டாவதாக 10,000 ரன்களைக் கடந்த வீரர் இவரே. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 120 போட்டிகளில் 25 சதங்கள், 46 அரைசதங்கள் என 8,830 ரன்கள் குவித்திருக்கிறார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 20,000+ சர்வதேச ரன்களைக் கடந்த ஒரே பாகிஸ்தான் வீரர் இன்றும் இன்சமாம் உல் ஹக் தான்.
inzamam ul haqஇம்ரான் கானால் கண்டெடுக்கப்பட்ட இந்த மூவருமே பின்னாளில் 1999, 2003, 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டனர். இதில், வாசிம் அக்ரம் வழிநடத்திய பாகிஸ்தான் அணி மட்டும் 1999 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிவரை சென்று கோப்பையை தவறவிட்டது. 2003-ல் வக்கார் யூனிஸ் தலைமையிலும், 2007-ல் இன்சமாம் உல் ஹக்கின் தலைமையிலும் பாகிஸ்தான் குரூப் சுற்றோடு வெளியேறியது. இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இவர்கள் மூவரும் என்றும் தவிர்க்க முடியாதவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இன்சமாம் எனும் இன்ஸ்பிரேஷன்: நிஜமாகவே ரன் அவுட்தான் இவரின் அடையாளமா? தரவுகள் சொல்லும் வேறு கதை!இன்று பாகிஸ்தான் மீள வழி என்ன?இன்றைய பாகிஸ்தான் அணியில் திறமைக்கு பஞ்சமில்லை. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தி அணிக்கு வெற்றியாக மாற்றக்கூடிய, ஈகோ இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய கேப்டன்தான் இல்லை. அத்தகைய கேப்டனை யாரும் உருவாக்க முடியாது, அவராகத்தான் உருவாக வேண்டும். அதற்கு முதலில், ஒருவரைக் கேப்டனாக நியமித்த பிறகு அடுத்த ஓரிரு தோல்விகளிலேயே புற அழுத்ததுக்கு அவரை நீக்கிவிட்டு வேறொருவரை கேப்டனாக்கும் முடிவு சரியாக இருக்குமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிவெற்றியோ, தோல்வியோ கேப்டனாகச் செயல்பட ஒருவருக்கு கூடுதல் அவகாசம் கொடுக்கலாம். அதெல்லாம், முடியாது என்று சொன்னால், 1983 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு இம்ரான் கான் கேப்டனாக இருந்திருக்க முடியாது, 1992-ல் முதல் உலகக் கோப்பையும் கிடைத்திருக்காது, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம் உல் ஹக் போன்ற சாதனையாளர்களும் உருவெடுத்திருபார்களா என்றால் சந்தேகம் தான்.
எனவே, இன்றைய அணியில் இம்ரான் கான் போன்ற தலைவன் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து வெற்றியோ தோல்வியோ அணியை ஓரணியில் திரளச் செய்வதே பாகிஸ்தானுக்கு இருக்கும் வழி..!
"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·