Ind v Nz : `நியூசிலாந்தின் மிடில் ஓவர் Strategy' - இந்தியா செய்ய வேண்டிய அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதவிருக்கின்றன. இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆடியிருந்தன. அந்தப் போட்டியையும் தோனியின் ரன் அவுட்டையும் இந்திய ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாது. அந்தத் தோல்விக்கு ரிவெஞ் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் விருப்பம். ஆனால், நியூசிலாந்து அணியை அத்தனை எளிதாக வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனம்.

Nz

'நியூசிலாந்தின் வியூகம்!'

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. அந்தப் போட்டியில் மட்டும்தான் ரொம்பவே சுமாராக ஆடியிருந்தனர். அதற்காக மீண்டும் அப்படியே நடக்குமென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அந்த ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக நேர்த்தியாக ஆடியிருக்கிறது.

பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலுமே வலுவாக இருக்கிறார்கள். முதலில் பேட்டிங்கை மட்டுமே எடுத்துக் கொள்வோமே. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இந்த 4 போட்டிகளில் மொத்தமாக 5 சதங்களை நியூசிலாந்து பேட்டர்கள் பதிவு செய்திருக்கின்றனர். வில் யங், ரச்சின், லேதம், வில்லியம்சன் என நான்கு வீரர்கள் சதமடித்திருக்கிறார்கள். இதில், ரச்சின் மட்டும் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். ஆசிய சூழலில் ஆடுவது அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகவுமே அபாயகரமான வீரராக இருப்பார். இவர்கள் போக டேரில் மிட்செலும் க்ளென் பிலிப்ஸூமே கூட கடைசிக் கட்டங்களில் அதிரடியாக ஆடுகின்றனர்.

IND Vs AUS: `கம்மின்ஸ் மாதிரி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை' - ஆஸி., கேப்டன் ஸ்மித்

'பெரிய பார்ட்னர்ஷிப்கள்!'

மேலும், ஓடிஐக்கு தேவையான பெரிய பார்ட்னர்ஷிப்களையுமே தவறாமல் அமைத்துவிடுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வில் யங்கும் லேதமும் இணைந்து 118 ரன்களும் லேதமும் க்ளென் பிலிப்ஸூம் இணைந்து 125 ரன்களும் பார்ட்னர்ஷிப்பாக அமைத்திருந்தனர். அதேமாதிரி, வங்கதேசத்துக்கு எதிராக ரச்சினும் லேதமும் இணைந்து 129 ரன்களை அடித்திருந்தனர். அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரச்சினும் கேனும் இணைந்து 164 சேர்த்திருந்தனர். இப்படியாக வென்ற போட்டிகள் அத்தனையிலும் நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்திருக்கின்றனர். இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் நியூசிலாந்து பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பதை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும்.

Rachin & Kane

'மிடில் ஓவர் யுக்தி!'

அதேமாதிரி, நியூசிலாந்து பேட்டர்கள் அந்த 50 ஓவர்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பவர்ப்ளேயில் ஓரளவு ரன்களை சேர்த்துவிட்டு மிடில் ஓவர்களில் விக்கெட்டே விடாமல் நின்று ஆடி தாக்குப்பிடிக்கவே விரும்புகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 11-40 மிடில் ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை எடுத்திருந்தனர். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இதே மிடில் ஓவரில் 154 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் இதே கட்டத்தில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை எடுத்திருந்தனர். இந்த மிடில் ஓவர்களில்தான் பெரிய பார்ட்னர்ஷிப்களையும் அமைக்கின்றனர். மிடில் ஓவர்களில் விக்கெட் விடாமல் நின்று ஆடிவிட்டு கடைசி 10 ஓவர்களில் எவ்வளவு வேகமாக ஆட முடியுமோ ஆடுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கையில் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 113 ரன்களையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 110 ரன்களையும் அடித்திருந்தனர்.

'இந்திய அணி செய்ய வேண்டியது!'

50 ஓவர்களை இப்படி அணுகுவது ஒரு மரபாந்த முறை. அதை வலுவாக பிடிப்போடு நியூசிலாந்து செய்து வருகிறது. நியூசிலாந்தை சுமாரான ஸ்கோருக்குள் மடக்க வேண்டுமெனில், மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை அமைக்கவிடாமால் கூண்டாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே மோதிய போட்டியில் அதுதான் நடந்திருந்தது. அந்தப் போட்டியின் மிடில் ஓவர்களில் இந்திய அணி 121 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. இறுதிப்போட்டியிலும் இதே விஷயத்தை மீண்டும் செய்தாக வேண்டும்.

Santner

அந்தப் போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் மட்டும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இதை பார்க்கையில் நியூசிலாந்து அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக கடுமையாக திணறுவதை போல தெரிகிறது. ஆனால், இந்தியாவை தவிர்த்துவிட்டு மற்ற 3 அணிகளுக்கு எதிராக மொத்தமாக சேர்த்தே 2 விக்கெட்டுகளை மட்டுமே ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருக்கின்றனர். ஆக, நியூசிலாந்தை மொத்தமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக பலவீனமான அணி என குறிப்பிட்டு விடவே முடியாது. அன்றைய நாளை பொறுத்துதான் எல்லாமே அமையும்.

Nz

பௌலிங்கை பொறுத்தவகையில் க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ஆகியோரோடு சேர்த்து அவர்களும் நான்கு ஸ்பின்னர்களை வைத்திருக்கவே செய்கிறார்கள். அரையிறுதியில் சாண்ட்னர் தென்னாப்பிரிக்காவை சூறையாடியிருந்தார். ப்ரேஸ்வெல் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். வேகப்பந்து வீச்சில் மேட் ஹென்றி ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

பீல்டிங்கில் சொல்லவே வேண்டாம். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் மிகச்சிறந்த பீல்டிங் அணி நியூசிலாந்துதான். இந்தத் தொடரில் Catch Efficiency இல் டாப் 4 இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதி வரை முன்னேறியிருக்கின்றனர். அந்த நான்கு அணிகளிலும் நியூசிலாந்து டாப்பில்தான் இருக்கிறது. க்ளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச்செல்லாம் கட்டாயம் நியாபகத்தில் இருக்குமே.

Glenn Phillips

ஆக, நியூசிலாந்தை ரிவஞ்ச் எடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. குறிப்பாக, பேட்டிங்கில் அவர்களின் மிடில் ஆர்டரில் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் வெல்ல முடியும்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article