IND vs AUS: ``ஆஸ்திரேலியா மிகச்சிறந்த எதிரணி ஆனால்..." - அரையிறுதி பற்றி ரோஹித் சொல்வதென்ன?

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் நாளை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. கடந்த 2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. அந்த தோல்விக்கு இப்போது இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.
ரோஹித்

ரோஹித் சர்மா பேசியதாவது, ``நியூசிலாந்துக்கு எதிரான போட்டியே இப்போதுதான் முடிந்திருக்கிறது. நாங்கள் நான்கு ஸ்பின்னர்களோடு செல்ல நினைத்தால் அதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்கிற வழிகளைப் பார்க்கவேண்டும். இங்கிருக்கும் சூழலுக்கு எந்த விஷயம் ஒர்க் அவுட் ஆகும், எது ஒர்க் அவுட் ஆகாது என்பது எங்களுக்குத் தெரியும். அதனைப் பொறுத்து சரியான காம்பினேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனாலும் இது சுவாரஸ்யமான விஷயமாகவே இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி அவரால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டிவிட்டார். இனி எல்லாமே எங்களைச் சார்ந்துதான் இருக்கிறது. அணித்தேர்வை பொறுத்தவரைக்கும் கூடுதலான ஆப்சன்கள் இருப்பது நல்லவிதமான தலைவலிதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்ன காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகுமோ அதற்கேற்ப அணியைத் தேர்வு செய்வோம்.

வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு ரொம்பவே துல்லியமடைந்திருக்கிறது. 2021 இல் அவர் இந்திய அணிக்காக ஆடியபோது போதிய அனுபவமில்லாமல் இருந்தார். ஆனால், இப்போது அவர் நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டார். எங்களுடைய பேட்டர்கள் சிலராலயே அவரின் பந்துவீச்சைக் கணிக்க முடியவில்லை. நான் ஸ்டம்புக்கு பின்னால் பீல்டிங் நிற்கையில் அவரின் வேரியேஷன்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

பேட்டர்களுக்கும் பௌலர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளை அளிக்கும் துபாய் மாதிரியான பிட்ச்கள்தான் எனக்குப் பிடித்தமானவை. அக்சர் படேலுக்கு முதலிலேயே ஒரு செய்தியை சொல்லிவிட்டோம். அதாவது, சூழல் எதுவாக இருந்தாலும் நீங்கள்தான் நம்பர் 5 இல் இறங்குவீர்கள் எனக் கூறிவிட்டோம். அவரும் அவரின் ரோலை உணர்ந்து சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்தார். அதனால்தான் அவரைத் தொடர்ச்சியாக நம்பர் 5 இல் பயன்படுத்தி வருகிறோம். 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸூம், இங்கே நியூசிலாந்துக்கு எதிராக வேகமாக 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அவர் ஆடியிருந்த இன்னிங்ஸூம் ரொம்பவே முக்கியமானது. நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோமோ அதைவிட ஒரு படி அதிகமாகவே சிறப்பாக ஆடுகிறார்.

ரோஹித்

ஆஸ்திரேலியா மிகச்சிறந்த எதிரணி. ஆனால், நாங்கள் கடந்த மூன்று போட்டிகளை எப்படி அணுகினோமோ அப்படியேத்தான் இந்தப் போட்டியையும் அணுகுவோம். அவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பதை விட நாங்கள் என்ன செய்யப்போகிறோம், எப்படி ஆடப்போகிறோம் என்பதிலேயே அதிக கவனத்தை செலுத்த விரும்புகிறோம். இந்தப் போட்டியில் கடுமையான சவால்களும் பதற்றங்களும் இருக்கவே செய்யும். இரண்டு அணிகளுக்குமே அரையிறுதி என்கிற அழுத்தம் இருக்கும்.

துபாயில் கடந்த இரண்டு மாதங்களாக நிறைய கிரிக்கெட் ஆடப்பட்டிருக்கிறது. அதனால் பிட்ச்கள் ஸ்லோ ஆகியிருக்கிறது. ILT20 யிலுமே மெதுவாக வீசக்கூடிய பௌலர்கள்தான் சாதித்திருந்தார்கள். அதனால்தான் அணியில் எந்த வீரருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் வருணை லெவனுக்குள் கொண்டு வந்தோம்.' என்றார்.

ரோஹித்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதில் எந்த அணி வெல்லும் என்பதை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

Read Entire Article