IndvAus : ஆஸி-யைக் கரை சேர்த்த ஸ்மித் - கேரி கூட்டணி; சவாலான டார்கெட்டை எட்டுமா இந்திய அணி?

9 months ago 8
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து ரன்களை எடுத்திருக்கிறது. துபாய் மைதானத்தில் இதுவே ஒரு சவாலான ஸ்கோராகத்தான் பார்க்கப்படுகிறது.

IndvAus

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தான் டாஸை வென்றிருந்தார். அவர் பேசுகையில், "இது கொஞ்சம் வறண்ட பிட்ச்சாக இருக்கிறது. அதனால் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எடுத்து அவர்கள் மீது அழுத்தம் ஏற்ற வேண்டும். இந்திய அணி சிறந்த அணி. இந்தப் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும். கான்லியையும் ஸ்பின்னரான தன்வீர் சங்காவையும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது, "இங்கிருக்கும் பிட்ச்கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருக்கின்றன. கடந்த 3 போட்டிகளிலுமே ஒவ்வொரு போட்டியிலுமே வித்தியாசமான அனுபவம்தான் வாய்த்திருக்கிறது. என்ன செய்வதெனக் குழப்பத்தில் இருக்கையில் டாஸை தோற்பது சிறந்தது. ஒவ்வொரு முறை இங்கு ஆடும்போதும் எங்களுக்குச் சவாலாகத்தான் இருந்திருக்கிறது. மெதுவாக வீசக்கூடிய பௌலர்கள் இங்கே சாதித்திருக்கிறார்கள். அதனால் இந்தப் போட்டியிலும் நான்கு ஸ்பின்னர்களுடனேயே செல்கிறோம். நாங்கள் கடந்த போட்டியில் எங்கே விட்டோமோ அங்கிருந்தே தொடங்க நினைக்கிறோம்" என்றார்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. புதிதாக உள்ளே வந்த கான்லி, ஷமியின் பந்தில் ஆரம்பத்திலேயே அவுட் ஆனார். ஆனால், எதிர்பார்த்ததைப் போலவே ஹெட் கொஞ்சம் பயமுறுத்தினார்.

எப்போது இந்திய அணிக்கு எதிராக ஆடினாலும் மிகச்சிறப்பாக ஆடுவார். அதனால் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே ஹெட்டின் விக்கெட்டை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்திருக்கிறது.

Head
Travis Head : முதல் பந்திலேயே ஹெட்டின் விக்கெட் - சம்பவம் செய்த வருண் சக்கரவர்த்தி!

அந்தவகையில், இன்றைய போட்டியில் ஹெட்டை 39 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. இன்றைய போட்டியிலுமே ஹெட் அபாயகரமாகத்தான் ஆடினார். ஷமி, ஹர்திக் என முதல் ஸ்பெல்லை வீசிய இருவரின் ஓவரிலுமே ஹெட் அதிரடியாக ஆடினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஓவரில் மட்டும் 5 பவுண்டரிக்களை அடித்தார். ஷமியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக ஆடுகிறார் என்பதால் ரோஹித் சர்மா சீக்கிரமே ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார்.

6 வது ஓவரிலேயே குல்தீப் உள்ளே வந்தார். அவரின் ஓவரிலும் ஹெட் சிக்சரை பறக்கவிட்டார். ஹெட் மீண்டும் ஒரு மிரட்டல் இன்னிங்ஸை ஆடப்போகிறாரோ எனத் தோன்றியது. ஆனால், 9 வது ஓவரில் வருண் உள்ளே வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஹெட் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஹெட்டுக்கு வருண் வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்தையே இறங்கி வந்து பெரிய சிக்சராக்க முயல்கிறார் ஹெட். ஆனால், லாங் ஆஃபில் கில்லிடம் கேட்ச் ஆனார். 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஹெட் அவுட். இந்தியாவுக்கான மிகப்பெரிய அபாயம் ஓய்ந்தது.

இதன் பிறகு லபுஷேனும் ஸ்மித்தும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே நிதானமாக ஆடினர். இந்திய ஸ்பின்னர்களின் பந்தில் விக்கெட் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். நிறைய டாட்கள் ஆடினர். மெய்டன் ஓவர்கள் ஆக்கினர். அக்சர் படேலும் ஜடேஜாவும் நேர்த்தியாக வீசியிருந்தனர். ஒரு 10 ஓவர்களுக்கு முழுமையாக நின்று ஆடிவிட்டதால் லபுஷேன் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆட தொடங்கினார். அக்சர் படேலின் பந்தில் சிக்சரையும் ஜடேஜாவின் பந்தில் பவுண்டரியையும் அடித்தார். ஜடேஜா நன்றாகப் பந்தை திருப்பிக் கொண்டிருந்தார். குட் லெந்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் ஆணி அடித்தாற் ஒரே இடத்தில் வீசி மிடிலிலிருந்து லெக்குக்கும் மிடிலிலிருந்து ஆப்க்கும் பந்தைத் திருப்பினார். இந்த அட்டாக்கில் லபுஷேன் வீழ்ந்தார்.

Jadeja

மிடிலிலிருந்து லெக்குக்கு திரும்பிய பந்தில் லபுஷேன் 29 ரன்களில் lbw முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த இங்லிஸூம் 11 ரன்களில் அதே ஜடேஜாவின் பந்தில் மிடிலிலிருந்து ஆஃப்க்கு திரும்பிய பந்தை அடிக்க முயன்று விராட் கோலியிடம் கேட்ச் ஆனார்.

ஸ்மித்தான் ஒரு பக்கம் நின்று தன்னுடைய அனுபவத்தை வெளிக்காட்டும் வகையில் ஆடியிருந்தார். அவரோடு சேர்ந்து அலெக்ஸ் கேரியும் கச்சிதமாக ஆடினார். ஒரு பக்கம் ஸ்மித் க்ரீஸில் முன்னும் பின்னும் இறங்கி வந்து ஸ்பின்னர்களை நேர்த்தியாக எதிர்கொண்டார். இன்னொரு பக்கம் அலெக்ஸ் கேரி பீல்ட் ப்ளேஸ்மெண்ட்களை மனதில் வைத்துக் கொண்டு இடைவெளிகளைப் பார்த்து ஆடினார். இதனால் ஒரு கட்டத்தில் இப்படியே சென்றால் ஆஸ்திரேலிய அணி சௌகரியமாக 280 ரன்களை கடக்கும் எனத் தோன்றியது. ஆனால், ஸ்மித் ஒரு கட்டத்தில் சதத்தை நோக்கி நகர்வார் என எதிர்பார்க்கையில் ஷமியின் பந்தில் 73 ரன்களில் அவுட் ஆனார். 140 கி.மீ வேகத்தில் லோ புல் டாஸாக ஷமி வீசிய பந்தில் இறங்கி வந்து ஆட முற்பட்டு போல்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த மேக்ஸ்வெல்லும் 7 ரன்களில் அக்சரின் பந்தில் போல்ட் ஆனார்.

Smith

சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்த அலெக்ஸ் கேரியும் கடைசி வரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்காமல் 61 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு ஆஸ்திரேலியா பெரிதாக ரன் சேர்க்கவில்லை. 49.3 ஓவர்களில் 264 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.

இந்திய அணிக்கு 265 ரன்கள் டார்கெட். துபாய் மைதானத்தில் இதுவே கொஞ்சம் சவால்மிக்க டார்கெட்தான். என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

IND vs AUS: மறக்க முடியாத இந்தியா vs ஆஸி., நாக்அவுட் போட்டிகள்; உங்கள் ஃபேவரைட்? - #கருத்துக்களம்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article