K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்ற வீரர்களை விடவும் கே.எல். ராகுலை நாம் அதிகமாகக் கொண்டாட வேண்டும். ஏன் தெரியுமா?

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை
Rahuk

தெளிவான கதாபாத்திரம்!

'Role Clarity' என்கிற வார்த்தையை இந்திய அணியின் கேப்டன்களும் பயிற்சியாளர்களும் அதிகம் பயன்படுத்துவார்கள். ஒரு அணியின் லெவனில் ஆடும் 11 வீரர்களுக்கும் அவர்கள் எந்தப் பணியை எந்த இடத்தில் எப்படி செய்யப் போகிறார்கள் என்கிற தெளிவை ஒரு அணியின் நிர்வாகம் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்துவிட்டாலே பாதி வெற்றிதான். இந்திய அணியும் அதில் தெளிவாகவே இருக்கிறது. ஆனால், கே.எல்.ராகுலை மட்டும் அவர்களின் விருப்பப்படி பல இடங்களில் இறக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இறங்கும் இடங்களிலெல்லாம் அவரும் சிறப்பாக ஆடிவிடுகிறார் என்பதுதான் பிரமாதம். எங்கே விரிசல் ஏற்படுகிறதோ அந்த விரிசலை இட்டு நிரப்புகிற ஆயுதமாகவே ராகுலை இந்திய அணி பார்க்கிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் ராகுல்

எங்களுக்கு மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்டர் தேவை. அதற்காகத்தான் அக்சரை மேலே ப்ரமோட் செய்தோம். ராகுல் ரொம்பவே நிதானமான பக்குவமான வீரர். அதனால்தான் அவரை அழுத்தமான சூழல்களில் இறக்கி வருகிறோம். நீண்ட நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த முடிவை எடுத்தோம் என சாம்பியன்ஸ் டிராபியில் ராகுலை நம்பர் 6 இல் இறக்கியதற்கு ரோஹித்தும் கம்பீரும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். அந்த நம்பர் 6 இல் ராகுலிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதை ராகுல் மிகத்தெளிவாகச் செய்துகொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கோலி அவுட் ஆன பிறகு 34 பந்துகளில் 42 ரன்களை எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்திருந்தார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் அழுத்தமான சூழலில் 33 பந்துகளில் 34 ரன்களை எடுத்து கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். இக்கட்டான சூழலில் அவ்வளவு நிதானமாக சாண்ட்னரின் பந்தை ராகுல் சிக்சராக்கிய விதம் க்ளாஸ். இதற்காகத்தான் ரோஹித்தும் கம்பீரும் ராகுலை நம்பர் 6 இல் பயன்படுத்தியிருந்தார்கள்.

Rahul

ராகுலின் நெகிழ்வுத் தன்மை

`எல்லா பொசிசனுக்கும் ஏத்த வீரர்' என ராகுலை பற்றி மீம்களெல்லாம் வைரலாகச் சுற்றிக்கொண்டிருக்கிற்து. உண்மையிலேயே ராகுல் ஓடிஐ போட்டிகளில் ஓப்பனிங்கில் இருந்து நம்பர் 7 வரைக்கும் எல்லா இடங்களிலும் இறங்கியிருக்கிறார். பெரும்பாலான இடங்களில் மிகச்சிறப்பாகவும் ஆடியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியில் நம்பர் 6 இல் 5 போட்டிகளில் 140 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட்டும் 100 க்கு நெருக்கமாக இருந்தது. இதுவரைக்கும் மொத்தமாக 8 போட்டிகளில் நம்பர் 6 இல் இறங்கியிருக்கிறார். 194 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 48.5 ஆக இருக்கிறது.

ராகுல் ஒரு ஓப்பனராகத்தான் இந்திய அணிக்குள் வந்தார். 2016 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஓப்பனராகத்தான் ஓடிஐ இல் அறிமுகமும் ஆகியிருந்தார். இதுவரைக்கும் ஓப்பனராக 23 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கிறார். 945 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 40 க்கும் மேல் இருக்கிறது. 2019 ஓடிஐ உலகக்கோப்பையில் நம்பர் 4, 6 இல் தான் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தார். ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கி வந்த தவான் காயமடையவே அவருக்குப் பதில் ஓப்பனிங் இறங்கி 9 இன்னிங்ஸ்களில் 361 ரன்களை எடுத்திருந்தார். தவான் விட்டுச் சென்ற இடத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே நிரப்பினார்.

நம்பர் 3 இல் 3 இன்னிங்ஸ்களில் ஆடி 77 ரன்களை எடுத்திருக்கிறார். நம்பர் 4 இல் 13 இன்னிங்ஸ்களில் இறங்கி 558 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 55.8. நம்பர் 5 இல் 31 இன்னிங்ஸ்களில் 1299 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 59.
Rahul

2019 உலகக்கோப்பையில் ஓப்பனிங் இறங்கிய ராகுல் 2023 உலகக்கோப்பையில் முழுவதுமே நம்பர் 5 இல் இறங்கியிருந்தார். 10 இன்னிங்ஸ்களில் 452 ரன்களை எடுத்திருந்தார். சென்னையில் நடந்த முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் சீக்கிரமே அவுட் ஆக, கோலியும் ராகுலும்தான் நின்று சிறப்பாக ஆடியிருப்பர்.

Rahul

ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு விதம்

ராகுல் அவரது ஓடிஐ கரியரில் 7 சதங்களை அடித்திருக்கிறார். 7 சதங்களும் மூன்று வெவ்வேறு பொசிஷன்களில் வந்தவை. ஓப்பனிங் இறங்கி 3 சதங்களை அடித்திருக்கிறார். நம்பர் 4-5 இல் தலா இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். ஓப்பனிங் இறங்குகையில் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 80 க்கு நெருக்கமாக இருக்கிறது. அதேநேரத்தில் நம்பர் 4,5,6 இல் இறங்கும்போது ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் சராசரியாக 91.5 ஆக இருக்கிறது. ஓப்பனிங்கில் தேவையான நிதானத்தையும் லோயர் மிடிலில் இறங்கும்போது தேவையான சமயத்தில் பெரிய ஷாட்களை ஆடும் திறனையும் வெளிப்படுத்துகிறார்.

ராகுல் ஓடிஐ கரியரில் 3043 ரன்களை எடுத்திருக்கிறார். ஓடிஐயின் 50 ஓவர்களை பத்து பத்து ஓவர்களாக ஐந்தாக பிரித்துக்கொண்டு பார்ப்போம். அத்தனை பகுதிகளிலுமே ஏறக்குறைய சமமான ரன்களை ராகுல் எடுத்திருக்கிறார். முதல் 10 ஓவர்களில் 411 ரன்களையும், 11-20 ஓவர்களில் 606 ரன்களையும், 21-30 ஓவர்களில் 621 ரன்களையும், 31-40 ஓவர்களில் 796 ரன்களையும் 41-50 ஓவர்களில் 609 ரன்களையும் எடுத்திருக்கிறார்.

Rahul

இப்படி எல்லா இடங்களிலும் தன்னை 'Adapt' செய்துகொள்ளும் திறன் வாய்க்கப் பெற்றிருப்பதால்தான் ராகுலை இந்திய அணி ஒரு வரமாகப் பார்க்கிறது. ராகுல் ஆரம்ப காலத்தில் ஒரு ரெட் பால் கிரிக்கெட்டராகத்தான் அறியப்பட்டார். இந்திய அணிக்குமே டெஸ்ட்டில்தான் முதலில் அறிமுகமானார். மரபார்ந்த முறையில்தான் கிரிக்கெட் ஆடுவார். தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டி எல்லா பார்மட்டுக்குமான வீரராக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார். அதன்பொருட்டே அட்டாக்கிங் கிரிக்கெட்டின் மீதும் கவனம் செலுத்தி பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி இந்திய ஒயிட் பால் அணிக்கும் தேர்வானார். இந்தப் பின்னணியால்தான் பலவிதமான அணுகுமுறைகளில் வெவ்வேறு இடங்களில் அவரால் ஆட முடிகிறது. இப்போதைய இந்திய அணியில் ராகுலைத் தவிர இப்படியொரு திறன் படைத்த வீரர் யாருமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Rahul

'Cricket is a team game' என்கிற கருத்தாக்கம் நிலைப்பெற்று நிற்பதற்கு ராகுல் போன்ற வீரர்கள் தன்னுடைய நலனை மறந்து அணியின் நலனுக்காக ஆடுவதே காரணம். ராகுல் இந்திய அணிக்கு கிடைத்த வரம்!

ராகுல் எந்த பொசிசனில் சிறப்பாக ஆடுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Read Entire Article