Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீதிமன்றம் கேள்வி

6 months ago 8
ARTICLE AD BOX

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற `தக் லைஃப்' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கமல் ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசுகையில், கன்னட மொழி தமிழிலிருந்து வந்ததுதான் எனக் கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், "வரலாறு தெரியாமல் கமல் ஹாசன் பேசக்கூடாது" என கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சித்தார்.

மேலும், இத்தகையப் பேச்சுக்கு கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட முடியாது எனக் கன்னட அமைப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

கமல் ஹாசன், சிவராஜ்குமார்கமல் ஹாசன், சிவராஜ்குமார்

ஆனால் கமல் ஹாசனோ, "இந்த ஆழமான விவகாரங்களை வரலாற்றாசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அகழாய்வாளர்களிடம் விட்டுவிடலாம். அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது" எனக் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் கமல் ஹாசனை சராமரியாகச் சாடிய நீதிபதி எம்.நாகபிரசன்னா, "நீங்கள் கமல் ஹாசனாக, வேறு யாராக இருந்தாலும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது.

இந்த நாடு மொழியின் அடிப்படையில் மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரபலம் அவ்வாறு கூற முடியாது. கர்நாடக மக்கள் மன்னிப்பு மட்டுமே கேட்டார்கள்.

ஆனால், நீங்கள் பாதுகாப்பு தேடி இங்கு வந்துள்ளீர்கள்.நீங்கள் வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியியல் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு பேசினீர்கள்?

ஒரு மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும். ராஜகோபாலாச்சாரியும் இதே போன்ற ஒன்றைச் சொல்லி மன்னிப்பு கேட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்றம்கர்நாடக உயர் நீதிமன்றம்

நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், எதற்காகக் கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்.

மொழி என்பது மக்களின் நிலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. கன்னடம் ஒரு வலுவான மொழி. இதுபோன்ற கருத்துக்களால் அதன் பலம் குறைந்துவிடாது.

அதேசமயம், கருத்து சுதந்திரத்தை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த அனுமதிக்க முடியாது. மன்னிப்பு கேளுங்கள் பிறகு எந்த பிரச்னையும் இருக்காது.

கர்நாடகாவிலிருந்து சில கோடிகள் சம்பாதிக்கவும் நீங்கள் விரும்புகிறீர்கள். மன்னிப்பது கேட்பது ஒன்று மட்டுமே உங்கள் முன் இருக்கிறது." என்று கூறினார்.

“தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” - ‘தக் லைஃப்’ விழாவில் கமல்ஹாசன் சொன்னது உண்மைதான்!

அப்போது, கமல் ஹாசனின் வழக்கறிஞர் சின்னப்பா, "அவரின் கருத்து யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல" என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, "சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், சூழ்நிலைகளை உருவாக்குபவருக்கும் வித்தியாசம் உள்ளது. மன்னிப்பு மட்டும்தான் இப்போது மிச்சம்" என்று கூறினார்.

கமல் ஹாசன்கமல் ஹாசன்

அப்போது வழக்கறிஞர் சின்னப்பா, "அவர் நிலைமையை அமைதிப்படுத்த விரும்புகிறார்" எனக் கூற, "ஒருவேளை அப்படியிருக்கலாம், ஆனால் இதற்கு யார் காரணம்? நிலைமையை நீங்கள் மீறச் செய்கிறீர்கள். உங்கள் படத்திற்காகத்தான் நீங்கள் பாதுகாப்பு கேட்கிறீர்கள்" என்று கூறி விசாரணையை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

Kannada row: தமிழில் இருந்துதான் பிரிந்ததா கன்னடம்? ஆய்வு சொல்வது என்ன? - Prof Muthuvelu Interview
Read Entire Article