Kubera: "7 மணிநேரம் நானும் ராஷ்மிகாவும் குப்பை கிடங்கில் நடித்தோம்" - குபேரா அனுபவம் பகிரும் தனுஷ்

6 months ago 7
ARTICLE AD BOX

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை 'குபேரா' படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

‘குபேரா’‘குபேரா’

இன்று மும்பையில் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடந்தது. 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வரும் தனுஷ் படப்பிடிப்பின் இடைவெளியில் வந்து இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

இது எங்களுக்கு ஸ்பெஷலான படம்

தனுஷ் பேசுகையில், " எனக்கு இந்தி தெரியாது. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அதுவும் கொஞ்சம்தான் தெரியும். 'குபேரா' மிகவும் வித்தியாசமான திரைப்படம். இது மற்றொரு திரைப்படம் என கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு ஸ்பெஷலான படம். என் உடன் இருப்பவர்களும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதுபோல, வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. குப்பையை கொட்டும் இடங்களிலும், குப்பை வண்டிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம்.

Kubera Audio Launch - DhanushKubera Audio Launch - Dhanush

ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் படம் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். இது ப்ரோமோட் செய்யப்பட வேண்டும். நான் இப்படத்தில் யாசகம் பெறுபவராக நடித்திருக்கிறேன்.

நான் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சேகர் சார் சொன்னதை பின்பற்றினேன். அவர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்கையை எனக்கு சுலபமாகக் கற்றுக் கொடுத்தார்.

நான் இதுவரை செய்த கதாபாத்திரங்களில் இது வித்தியாசமானது. இந்த சவாலையும் நான் என்ஜாய் செய்தேன். சேகர் சார் அற்புதமான மனிதர். அவரைப் போல ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது.

அவருக்காகவே இப்படத்தை நான் செய்தேன். சினிமா மீதான அவருடைய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தின் கதையை நான் வெறும் 20 நிமிடங்கள்தான் கேட்டேன்." என்றவர், " நானும் ராஷ்மிகாவும் இப்படத்தின் ஒரு காட்சிக்காக குப்பை கிடங்கில் இருந்து நடித்தோம்.

கிட்டதட்ட 7 மணி நேரம் வரை அங்கு படப்பிடிப்பு நீண்டது. அப்படியான காட்சிகளில் சில நேரம் மாஸ்க் அணிந்திருப்போம். சில நேரங்களில் அணிந்திருக்கமாட்டோம். அது பிரச்னை கிடையாது.

ஆனால், இப்படத்தின் மூலம் இன்னொரு வாழ்க்கையை பார்க்க முடிந்தது. நான் அப்படியான நிலைமையில் இருந்துதான் வந்திருக்கிறேன். இப்போது கடவுளின் அருளால் இங்கு நிற்கிறேன். மீண்டும் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கு இப்படம் அழைத்துச் சென்றது." என்றார்.

Read Entire Article