Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிறதா இந்த மேட்னி ஷோ?

6 months ago 8
ARTICLE AD BOX

அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது.

அதை ஏற்று, கண்ணன் ('காளி' வெங்கட்) என்ற ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுநரின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

கண்ணன், தனது மனைவி கமலம் (ஷெல்லி), மகள் தீபிகா (ரோஷினி ஹரிபிரியன்) மற்றும் மகன் தினேஷுடன் (வி. விஷ்வா) சென்னையில் வசித்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப வருமானத்தில், தங்கள் குடும்பத்தைக் கவனித்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்குகின்றனர் கண்ணன் - கமலம் தம்பதியினர்.

Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

இந்நிலையில், மோசமான பொருளாதாரச் சூழல், குடும்பத்திற்குள் இருக்கும் மனக்கசப்புகள், தந்தை - மகள் சண்டை, உறவுகளுக்கிடையே இருக்கும் ஈகோ என கண்ணன் என்ற சாமானியரின் வாழ்க்கையிலிருக்கும் பல ஆச்சரியங்களையும், சாகசங்களையும், ஏற்ற இறக்கங்களையும் ஜோதி ராமையாவின் பார்வையிலும் குரலிலும் பேசுகிறது அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கியிருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம்.

Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?தன் நையாண்டி பேச்சாலும், ஒன் லைன் கவுன்ட்டர்களாலும் உட்கார்ந்த இடத்திலிருந்தே சிரிக்க வைக்கிறார் சத்யராஜ்.

ஆனாலும், ஆங்காங்கே அவருடைய வசனங்களின் நீளம் அடிஷனல் பேப்பர் வாங்கி, அயற்சியைத் தருகிறது.

குடும்பத்தின் மீதான அக்கறை, பிள்ளைகள் மீதான அதீத பாசம், வலியவர்களிடம் குனிந்து போகும் சூழல், உதவிக்கு அல்லாடும் தருணம் என, மிடில் க்ளாஸ் மனிதனாகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் 'காளி' வெங்கட்.

சிறிது பிசக்கினாலும், டெம்ப்ளேட் கதாபாத்திரமாக மாற வேண்டிய கண்ணன் கதாபாத்திரத்தை, தன் நுணுக்கமான முகபாவங்களாலும், உடல்மொழியாலும் அழுத்தமாக மாற்றியிருக்கிறார்.

Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

இறுக்கமும், முதிர்ச்சியும் கொண்ட கதாபாத்திரத்தை, மௌனத்தையும், மிகக் குறைவான வசனங்களையும் கொண்டே மனதில் பதிய வைக்கிறார் ஷெல்லி.

துருதுருப்பு, ஆக்ரோஷம், ரொமான்ஸ், தந்தை மீதான பாசம் என, வாலிபத்தின் அகத்தை அதீதமின்றி நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் விஷ்வா.

சிறிது நேரமே வந்தாலும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் தன் கதாபாத்திரத்தை உணர்வுகளால் கோர்த்து, இறுதிக்காட்சியில் கவனிக்க வைக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன். 

சினிமாவில் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சதே Surprise தான்! - Kaali Venkat| Madras Matinee Interview தாங்கள் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு ஷோவை நடத்தியிருக்கிறார்கள் ராமர், கீதா கைலாசம், ஜார்ஜ் மரியன்.

சுனில் சுகாதே, அர்ச்சனா, மதுமிதா ஆகியோர் அழுத்தமில்லாமல் வந்து, திரையை நிரப்பியிருக்கிறார்கள்.

இயக்குநரின் புதுமையான கதை சொல்லல் முயற்சிக்குத் தேவையான திரைமொழியைக் கொண்டு வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி.கே - படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் கூட்டணி.

ஆர்ப்பாட்டமில்லாத, யதார்த்தமான ஒளிப்பதிவும், சாதாரணக் காட்சிகளை ரகளையான கட்களால் சுவாரஸ்யமாக்க முயலும் படத்தொகுப்பும் படத்தின் பலம்.

Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

கே.சி.பாலசாரங்கன் இசையில், சினேகன் வரிகளில், வடிவேலுவின் குரலில் 'என்னடா பொழப்பு இது', விஜய் யேசுதாஸ் குரலில் 'உசுரே உன்னைத் தானே' ஆகிய பாடல்கள் ஓகே ரகம்.

கோபம், அன்பு, ஆற்றாமை, ஆக்ரோஷம், நையாண்டி எனப் பல அடுக்குகளுக்குப் பின்னணி இசை ஏணியாக இருந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளில் தேவைக்கு மீறி வாசித்து, ஏணியை ஆட்டவும் செய்திருக்கிறது.

கண்ணனின் வீடு, அம்பாஸிட்டர் கார், அரசு அலுவலகம் என யதார்த்தத்தின் துல்லியத்தைக் கூட்டியிருக்கிறார் கலை இயக்குநர் ஜாக்கி. அதற்கு நந்தினி நெடுமாறனின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது.

Kaali Venkat: ``உங்கள் ஒவ்வொருவருடைய விமர்சனத்தைப் படிக்கும்போதும்..." - கலங்கிய காளி வெங்கட் கண்ணனின் உலகையும், கதாபாத்திரங்களையும் சத்யராஜின் நக்கல், நையாண்டியோடு அறிமுகப்படுத்தும் யுக்தி, தொடக்கத்தில் சுவாரஸ்யம் தருகிறது.

வழக்கமான கதாபாத்திரங்கள்தான் என்றாலும், அவற்றில் சின்ன சின்ன சுவாரஸ்யங்களைக் கூட்டி, விவரித்த விதம் ரசிக்க வைக்கிறது.

ஆனால், 'ஆடியோ டிஸ்க்ரிப்ஷன்' போல், கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிற்கும், சத்யராஜ் ரன்னிங் கமெண்டரி கொடுப்பது, அயற்சியைத் தருகிறது.

மழை வரும் காட்சியைக் காட்டிவிட்டு, 'இப்ப மழை பெய்யுது' என்கிற ரீதியில் வாய்ஸ் ஓவர் வைத்ததெல்லாம் சோதனையிலும் சோதனை.

Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

பழக்கப்பட்ட காட்சிகள், யூகிக்கும்படியான திருப்பங்களுடன், நீண்ட நீண்ட காட்சிகளாக நீள்கின்றன. இதனால், நடிகர்களில் ஆழமான, அழுத்தமான நடிப்பு பார்வையாளர்களுக்குக் கடத்த முயலும் எமோஷன் கரையத்தொடங்குகிறது.

வாய்ஸ் ஓவர், கட்கள், ப்ரேம்களால் வழக்கமான காட்சிகளைப் புதுமையாகச் சொல்லி, பார்வையாளர்களிடம் பதிய வைக்கும் இயக்குநரின் முயற்சி, சில காட்சிகளுக்கு மட்டும் கைகொடுக்க, ஏனைய காட்சிகளில் கையைக் கடிக்கிறது.

Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்

மேலும், கதையில் பெரிய திருப்பங்களோ, திரைக்கதையில் அடுத்தகட்ட நகர்வுகளோ இல்லாமல் இருப்பது, ஆங்காங்கே நம்மைச் சோர்வடையச் செய்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு வரும் 'பூமர் அங்கிள்' தொகுப்பு வழியாக காமெடியும், எமோஷனும் கடத்தப்பட்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் அத்தொகுப்பின் அதீத நீளம், படத்திலிருந்தும் கதையிலிருந்தும் பார்வையாளர்களை வெளியே தள்ளுகிறது.

இவற்றைத் தாண்டி, கண்ணனின் அம்மாவான 'ஆயா' கதை, வட்டிக்குக் கடன் தருபவரின் டைமிங் காமெடி, ஊறுக்காய்க்காரரின் சேட்டைகள், தினேஷுக்கும் வளர்ப்பு நாய்க்கும் உள்ள பந்தம்,

90ஸ் அக்கா - 2கே தம்பிக்கு இடையிலான செல்ல உரையாடல், ஜார்ஜ் மரியனுடன் அம்பாஸிட்டர் ஓட்டப்பழகும் படலம், 'பச்சோந்தி' பிரேமா (கீதா கைலாசம்), அவரின் தம்பி ரகு (ராமர்) ஆகியோரின் டைமிங் காமெடிகள் எனத் தொகுப்பு, தொகுப்பாக காமெடிகளும், எமோஷனும் விட்டு, விட்டு ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்Madras Matinee Review | மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, இறுதிக்காட்சியின் உணர்வுபூர்வமான தருணங்களைத் தாங்கிப் பிடித்து, கதையின் கருப்பொருளைக் காப்பாற்றுகிறது.

கதையில் புதுமையையும், திரைக்கதையில் வேகத்தையும் கூட்டியிருந்தால், இந்த 'மெட்ராஸ் மேட்னி' நம் மனத்தில் ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடியிருக்கும்.

RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article