ARTICLE AD BOX
மூன்று பருவங்கள், மூன்று தோற்றங்கள் என முதல் படத்திலேயே ஆழமானதொரு வேடம் அறிமுக நடிகர் ருத்ராவுக்கு! இதில் சிறுவனாக வரும் பகுதிகளில் துள்ளலான நடிப்பைக் கொடுத்திருப்பவருக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. ஆனால் முதிர்ச்சியான உணர்வுபூர்வமான இடங்களில் அனுபவமின்மை தெரிகிறது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டு நடுங்குகிற இடம், அதே ஆக்ரோஷமான குணத்தைத் தனது காதலனிடம் பார்த்து நடுங்குவது ஆகிய இடங்களில் தேவையான நடிப்பைக் கொடுத்து தமிழில் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார் மிதிலா பால்கர். தம்பிக்கு உதவியாக கேமியோ பணியைச் செய்திருக்கும் விஷ்ணு விஷால், 'விஜய்யின் ஜனநாயகன், அஜித்தின் ரேஸிங், சூரி அனுப்பிய மிட்டாய்…' எனத் தமிழ் சினிமாவின் பாப் கல்ச்சர் ரெஃபரன்ஸ்கள் மூலம் ரசிகர்களைக் கைதட்ட வைக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நவீன் பிள்ளை, நிவாஷினி நடிப்பில் குறைகளில்லை. படத்தின் மையமான அஷ்வின் - மீராவின் காதல் கதைக்கு, இருவரின் பின்கதையும் நன்றாக உதவியிருக்கிறது. விடலைப் பருவ காதலியாக வரும் வைபவியின் நடிப்பு கவர்ச்சி எபிசோடு! இயக்குநர் மிஷ்கின் மிஷ்கின்னாகவே வரும் இடங்கள் அதகளம். சித்தப்பாவாக கருணாகரன் ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். அளவாகப் பேசி காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி வரும் சில இடங்கள் கலகல!
படத்தின் இளமைத் துடிப்பையும், காதலின் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறது ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு. பருவ மாற்றங்களை ஒளியுணர்வில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. சிறப்பான 'கட்'களால் அதனைச் சிதைவில்லாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரணவ். இருப்பினும் முதல் பாதியிலிருந்த நேர்த்தி, இரண்டாம் பாதியில் காணவில்லையே என்ற எண்ணம் எழாமல் இல்லை. படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடல் இனிமையான மெலோடி. படத்தின் பின்னணி இசை, காதல் காட்சிகளுக்குக் கைகொடுக்கிறது.
‘சினிமாவுக்குள் சினிமா’ என்ற ஃபார்மேட்டில் காமெடி, காதல், எமோஷன் என்ற பார்முலாவில் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். இதில் அஷ்வின் தன் கதையைச் சொல்வது, அதை விஷ்ணு விஷால் கேட்பது, இடையிடையே மிஷ்கின் வருவது ஆகிய இடங்கள் எல்லாம் காமெடி ட்ரீட்! முதல் இரண்டு காதல் கதைகளும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜாலியாக சீக்கிரமாக முடிந்தாலும், அதில் தன்பாலின ஈர்ப்பாளர்களை வைத்துவரும் நகைச்சுவையைத் தவிர்த்திருக்கலாம். முதல் பாதி அலுப்படையச் செய்யாமல் செல்ல, இன்றைய இளைஞர்களின் உறவு பிரச்னைகளை நேரடியாக அட்ரஸ் செய்யும் “நீ டாக்ஸிக்” என்று ரெடின் கிங்ஸ்லி சொல்லும் வசனம் முக்கியமானது.
Superman Movie Review | James Gunn | David Corenswet | DC | Cinema Vikatanஇரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் மிஷ்கின் ஷூட்டிங் காட்சிகள் கலகலவென சிரிக்க வைத்தாலும், முதல் பாதி அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை. எமோஷன் காட்சிகள் அனைத்தும் கிளிஷேக்களாகவே சுருங்கி நிற்கின்றன. இடைவேளை வரை மீராவைத் தவறு செய்யாதவர் என்று காட்டிவிட்டு, பின்பு அவரையே குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி மன்னிப்பு கேட்க வைப்பது எல்லாம் ‘கேஸ் லைட்டிங் பிஹேவியர்’ இயக்குநரே! அதேபோல அஷ்வின் பெற்றோர், மீராவின் அம்மா போன்ற கதாபாத்திரங்களின் வரைவுகள் ஆரம்பத்தில் சரியாகத் தொடங்கப்பட்டு, இறுதியில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல் போய்விடுகின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு இன்னும் ஆழம் கொடுத்து எழுதியிருக்கலாம்.

5 months ago
6





English (US) ·