ARTICLE AD BOX
ஐ.பி.எல் எப்படி எப்படியெல்லாமோ மாறிவிட்டது. 2008 -ல் சொற்பமாக இருந்த ஐ.பி.எல் இன் வணிக மதிப்பு இப்போது பல ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது. எத்தனையோ விதிமுறைகள் இங்கே மாறியிருக்கிறது. ஆனால், மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் 'ஈ சாலா கப் நமதே!' என்கிற கோஷம் மட்டும்தான். 17 ஆண்டுகளாக வெறும் சொல்தான். இந்த முறையாவது செயலில் காட்டுவார்களா? முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வார்களா?
Virat Kohli'ஈ சாலா கப் நமதே!'
பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டீவில்லியர்ஸ் ஒவ்வொரு சீசனுக்கு முன்பும், 'ஈ சாலா கப் நமதே' என கோலிக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்புவாராம். அதற்கு கோலி, 'தயவு செய்து அதை மட்டும் அனுப்பாதீர்கள்.' என ரிப்ளை செய்வாராம். ஆனாலும் டீவில்லியர்ஸ் சீசனுக்கு சீசன் 'ஈ சாலா கப் நமதே' என்று வாழ்த்து சொல்லிக்கொண்டே இருப்பாராம். டீ வில்லியர்ஸ் ஒரு பேட்டியில் இதை பகிர்ந்திருக்கிறார். டீ வில்லியர்ஸ் பிரதிபலிப்பது அந்த அணியின் தீவிர ரசிகர்களின் மனநிலையை! ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தாலும் ஆர்சிபி அணியின் மீது அதன் ரசிகர்களுக்கு இன்னும் நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த அணியின் ஒவ்வொரு வீரருக்குமே இருக்கிறது.
'புதிய கேப்டன்!'
இந்த முறை ஆர்சிபி அணியில் பெரிய மாற்றமே நிகழ்ந்திருக்கிறது. கடந்த 3 சீசன்களாக கேப்டனாக இருந்த டூப்ளெஸ்சிஸை தக்கவைக்காததால் இப்போது ரஜத் பட்டிதரை கேப்டன் ஆக்கியிருக்கிறார்கள். ஒரு மெகா ஏலத்துக்குப் பிறகு அணியில் நிறைய புது வீரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள்ளாக செட் ஆகி ஒரு அணியாக உணரத் தொடங்க கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு கேப்டன்தான் அத்தனை வீரர்களையும் எப்படி ஒருங்கிணைக்கலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், இங்கே கேப்டனே புது வீரர். புதிய கேப்டன்கள் முதல் சீசனிலேயே ஜொலித்த வரலாறும் இருக்கிறது. செல்ஃப் எடுக்காமல் அப்படியே துவண்டுபோன வரலாறும் இருக்கிறது. இதில் ரஜத் பட்டிதர் என்னவாகப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி. ஆனால், ரஜத் பட்டிதர் கேப்டன்சியில் கொஞ்சம் அனுபவம் மிக்கவர். உள்ளூர் போட்டிகளில் மத்தியபிரதேச அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். அதனால் அவர் சொதப்பமாட்டார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
Rajat Patidar'பேட்டிங் லைன் - அப்!'
ஓர் அணியாகவுமே கடந்த சீசன்களைவிட ஒரு நல்ல அணியைத்தான் பெங்களூரு அணி வைத்திருக்கிறது. வில் ஜாக்ஸ் மாதிரியான வீரர்களைக் காரணமே இல்லாமல் ஏலத்தில் கோட்டைவிட்டாலும் அதற்கெல்லாம் ஈடுசெய்யும் வகையில் நல்ல நல்ல வீரர்களையும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
பில் சால்ட், விராட் கோலி, லிவிங்ஸ்டன், ரஜத் பட்டிதர், ஜித்தேஷ், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட் என பேட்டிங்கில் ஒரு படையே இருக்கிறது. க்ளிக் ஆகும்பட்சத்தில் அபாயகரமான பேட்டிங் லைன் அப்பாக இது இருக்கும். ஆனாலும் வெளிநாட்டு பேட்டர்களை அதிகம் சார்ந்திருக்கும் தோற்றம் இருப்பதையும் மறுக்கமுடியாது.
Saltபில் சால்ட் அதிரடியாக ஆடுவார். ஆனால், டூப்ளெஸ்சிஸை போல சீராக ஆடுவாரா என்பது கேள்விக்குறியே. டிம் டேவிட், லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் இந்த Consistency தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். வெளிநாட்டு வீரர்களுக்கு ஈடுகட்டும் வகையில் இந்திய பேட்டர்களும் இல்லை. கோலி, ரஜத் பட்டிதர், ஜித்தேஷ் சர்மா மட்டும்தான் நம்பத்தகுந்த வகையில் இருக்கின்றனர். படிக்கல் ஐ.பி.எல்லின் கடந்த சில சீசன்களாக சொதப்பியே வருகிறார். இந்த இடத்தில் கூடுதலாக இன்னுமொரு வலுவான பேட்டர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பேட்டிங் லைன் அப்பை பேப்பரில் பார்க்கையில் வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த லைன் அப் முறையாக சீராக ஆடி ரிசல்ட்டைக் கொடுக்குமா என்பதுதான் கேள்வி.
'பௌலிங் லைன் - அப்!'
ஆர்சிபிக்கு பௌலிங்தான் எப்போதுமே பெரிய பலவீனமாக இருக்கும். இந்த முறை அதில் கொஞ்சம் தேறியிருக்கிறார்கள். ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார் மற்றும் ஏற்கெனவே தக்கவைக்கப்பட்ட யாஷ் தயாள் ஆகியோர் எதிரணிக்கு சவாலளிக்கக்கூடிய பௌலர்களாக இருப்பார்கள். குறிப்பாக, பெங்களூரு மைதானத்தில் நெளிவு சுளிவு தெரிந்து வீசக்கூடியவர்களாக இருப்பார்கள். கூடவே ரொமாரியோ ஷெப்பர்ட்டும் இருக்கிறார். ஸ்பின்னர்கள்தான் பிரச்னை. முழுமையாக நம்பி செல்லும் அளவுக்கு ஸ்பின்னர்கள் அணியில் இல்லை. க்ரூணால் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர்தான் இருக்கின்றனர். கூடவே லிவிங்ஸ்டன் இருக்கிறார். ஸ்பின்னர்கள் வீசப்போகும் அந்த 4-8 ஓவர்களில் எந்தப் பிரச்னையும் இருக்காது என நம்பி உத்தரவாதம் கொடுக்கும் வகையிலான ஸ்பின்னர்களாக இவர்கள் இல்லை.
Mumbai Indians : `கப்பு ஜெயிச்சு நாலு வருசம் ஆச்சு ப்ரோ' - அணிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?
RCBjஐ.பி.எல் ஆரம்பித்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் கோலி பெங்களூருவில்தான் இருக்கிறார். எத்தனையோ ஸ்டார் வீரர்கள், ட்ரெண்டிங் வீரர்கள் அந்த அணியில் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறையும் இந்த அணி கோப்பையை வெல்லும் என அடித்துச்சொல்ல முடியவில்லை. ஆனாலும் கடந்த சீசன்களைப் போன்ற சுமாரான அணியாக இந்த அணி இல்லை. ஒன்றிரண்டு வீரர்கள் மட்டும் மொத்த பாரத்தையும் சுமக்காமல் ஓர் அணியாக இணைந்து அனைவரும் வெற்றியில் பங்களிப்பு செய்தால் பெங்களூரு அணியால் இந்த சீசனில் சாதிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

9 months ago
9







English (US) ·