RCB : 'கனவெல்லாம் பலிக்குதே..' - கோலியின் கையில் ஐ.பி.எல் கோப்பை! - கொண்டாடுங்க ரசிகர்களே!

6 months ago 8
ARTICLE AD BOX

ஆர்சிபி ரசிகர்களின் இத்தனை ஆண்டு ஏக்கமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அத்தனை கேலிகளையும் கிண்டல்களையும் விமர்சனங்களையும் தாண்டி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. கோலியின் கையில் சிக்காமல் இருந்த அந்த ஐ.பி.எல் கோப்பை இப்போது சிக்கியிருக்கிறது.

Virat Kohli - RCB vs PBKSVirat Kohli - RCB vs PBKS

கோலி இந்த அணிக்காக அவ்வளவு உழைத்திருக்கிறார். ஆனால், அதற்கான பலனை அறுவடை செய்யாமலே இருந்தார். இதோ இப்போது அந்த சம்பவம் நடந்துவிட்டது. கோலியின் கையில் இதோ அந்த ஐ.பி.எல் கோப்பை தவழ்ந்து கொண்டிருக்கிறது.

பெங்களூரு அணி இதற்கு முன்பும் கோப்பையை நெருங்கி வந்திருக்கிறது. 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸூக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடியிருப்பார்கள். அனில் கும்ப்ளேதான் கேப்டன். சீசன் முழுக்க சேர்த்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.

தன்னுடைய பௌலிங்கின் வழி அணியை முன்னெடுத்து வந்திருப்பார். அந்த இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். ஆட்டநாயகன் அவர்தான். ஆனால், போட்டியில் ஆர்சிபி தோற்றிருக்கும்.

பெருத்த ஏமாற்றத்தோடு வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பியிருப்பர். 2016 இல் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருப்பார்கள்.

Virat Kohli - RCB vs PBKSVirat Kohli - RCB vs PBKS

அந்த சீசன் கோலியுடையது. நான்கு சதங்களோடு 900+ ரன்களை அடித்திருப்பார்.

ஆனால், அந்த இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் சார்பில் பென் கட்டிங் என்கிற வீரர் கன்னாபின்னாவென அடித்து ஆர்சிபியின் கனவைக் கலைத்திருப்பார். கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டு மனமே இல்லாமல் அந்த ஆரஞ்சு தொப்பிக்கான விருதை வாங்கி சென்றிருப்பார் கோலி.

இடையில் 2011 இல் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருப்பர். அப்போது சென்னைக்கு எதிராக ஆடியிருந்தனர்.

கெய்ல் உச்சக்கட்ட பார்மில் இருந்த சீசன் அது. அங்கேயும் வெல்ல முடியவில்லை. அஷ்வின் எமனாக வந்தார்.

ஒரு வீரராக கோலி தன்னால் இயன்ற அத்தனையையும் ஆர்சிபிக்காக செய்திருந்தார். 2008 இல் U19 உலகக்கோப்பையை வென்ற கையோடு கோலி பெங்களூரு அணிக்குள் வந்தார்.

கோலி டெல்லியை சேர்ந்தவர். அதனால் டெல்லியை மையமாகக் கொண்ட அணிதான் கோலியை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி கோலியை கைவிட்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் இழைக்கப்பட்ட மிகத்தவறான முடிவுகளில் அதுவும் ஒன்று. அந்த சமயத்தில் கோலியின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து பெங்களூரு அணி அவர் மீது முதலீடு செய்தார்.

அப்போதிருந்தே கோலிக்கு பெங்களூரு அணிதான் எல்லாமே.

Virat Kohli - RCB vs PBKSVirat Kohli - RCB vs PBKS

பெங்களூரு அணியுமே அவரைக் கைவிடவில்லை. ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஏலத்துக்கே செல்லாத ஒரே வீரர் விராட் கோலிதான்.

18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக மட்டுமே ஆடியிருக்கும் வீரரும் விராட் கோலி மட்டும்தான். இடையில் பல அணிகள் கோலிக்கு வலைவிரித்துப் பார்த்திருக்கின்றன. எதற்கும் கோலி சிக்கவில்லை. அவருக்கு ஆர்சிபி அணியில் ஆடவேண்டும். உயிரைக்கொடுத்து ஆட வேண்டும்.

அந்த அணி கோப்பையை வெல்கிறதோ இல்லையோ. அதன் நிமித்தம் ஈ சாலா கப் நமதே என சொல்லி வெறுப்பேற்றுகிறார்களோ இல்லையோ... அதைப்பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை.

அவர் அதே வெறிகொண்ட மிருகமாக ஆடிக்கொண்டே இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

இப்போது கோலிக்கு 36 வயது. ஆனாலும் கடந்த 3 சீசன்களில் ஆர்சிபிக்காக 600+ ரன்களை அடித்திருக்கிறார்.

கேப்டனாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அவர் அதே கோலிதான். 19 வயதில் என்ன மாதிரியான பசியோடு பெங்களூரு அணிக்குள் வந்தாரோ அதே பசியோடுதான் இப்போதும் இருக்கிறார்.

இந்த இறுதிப்போட்டியை கூட எடுத்துக்கொள்ளுங்கள்.

Virat Kohli - RCB vs PBKSVirat Kohli - RCB vs PBKS

அவரால் அதிரடியாக ஆட முடியும். அப்படியிருந்தும் அணிக்காக நின்று செகண்ட் பிடில் ஆடினார். ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார்.

தோற்றிருந்தால் கோலியின் மீது மொத்தப் பழியையும் சுமத்தியிருப்பார்கள். ஆனால், பரவாயில்லை.

கோலியால் இப்படித்தான் ஆட முடியும். அணிக்காக, அணிக்கு என்ன தேவையோ அப்படித்தான் ஆட முடியும்.

கொண்டாடுங்கள் கோலி!

ஆனால், இந்திய அணியிலும் சரி பெங்களூரு அணியிலும் சரி அவரின் தலையை அலங்கரிக்க வேண்டிய கிரீடம் மட்டும் கிடைக்கப்பெறாமலே இருந்தது.

சமீபமாகத்தான் இந்திய அணியில் அவருக்கான வெற்றிகள் கிடைக்கிறது. 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் அடித்துக் கொடுத்து டி20 உலகக்கோப்பையையும் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது.

Virat Kohli - RCB vs PBKSVirat Kohli - RCB vs PBKS

இதோ இப்போது இத்தனை ஆண்டு கேலிகளையும் விமர்சனங்களையும் தாண்டி கோலியின் கையில் ஒரு ஐ.பி.எல் கோப்பை.

கோலியை அரசன் என்று கொண்டாடுகிறார்கள். அந்த அரசனின் தலையில் இதோ மீண்டும் கிரீடம்! கோலிக்காக வென்ற ஆர்சிபிக்கு வாழ்த்துகள்.

Read Entire Article