Regai Review: ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவிய மெடிக்கல் த்ரில்லர்; இந்த ரேகை ஆழமாகப் பதிகிறதா?

4 weeks ago 2
ARTICLE AD BOX

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘ரேகை’ வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

குற்றாலம் அருகே உள்ள பகுதியில் காவல் அதிகாரியாக இருக்கிறார் வெற்றி (பாலஹாசன்). அங்கொரு விடுதியில் மர்மமான முறையில் ஒரு இளைஞர் இறந்து கிடக்கிறார். இவர் வெற்றிக்கு உடன்பிறவா சகோதரரைப் போன்றவர்.

அவரின் மரணத்திற்கான காரணத்தைத் தேட களத்தில் இறங்கும் வெற்றி, மர்மமான விஷயங்களுக்குப் பின்னாலிருக்கும் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார்.

Regai Web Series ReviewRegai Web Series Review

விடுதியிலிருந்த அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

அத்தோடு இறந்துபோன இளைஞரின் கைரேகையுடன், அதே சமயத்தில் இறந்துபோன வேறு மூவரின் கைரேகையும் ஒத்துப்போகிறது.

இந்த நால்வருக்கும் என்ன தொடர்பு, இந்த நால்வரையும் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பதை ஆறு எபிசோடுகளில் சொல்கிறது இந்த ‘ரேகை’ சீரிஸ்.

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

கதையின் நாயகனாக பாலஹாசன் மிடுக்கான போலீஸ் உடை, அக்கதாபாத்திரத்திற்குத் தேவைப்படும் நிமிர்ந்த நடை எனக் கச்சிதமான காவல் அதிகாரியாகவே மாறிக் கவனம் ஈர்க்கிறார்.

ஆக்ரோஷமான ஆக்ஷன், சென்டிமென்ட் என இரண்டு டோன்களிலும் ஸ்கோர் செய்து ஹீரோவாகவும் தடம் பதிக்கிறார். ரொமான்ஸைத் தாண்டி ஓரிரு ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் களமிறங்கியிருக்கும் பவித்ரா ஜனனியின் நடிப்பில் குறையேதுமில்லை.

பெரிய லெவல் க்ரைம் விஷயங்களை நிகழ்த்தும் முக்கிய வில்லியாக அஞ்சலி ராவ் வெறுப்பூட்டும் நடிப்பைத் தந்து மூன்று வில்லன் கதாபாத்திரங்களுக்கு இடையில் தன்னுடைய கதாபாத்திரத்தை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.

Regai Web Series ReviewRegai Web Series Review

க்ரைம் விஷயங்களுக்குத் துணை நிற்கும் வினோதினி வில்லனிசத்தில் ஓகே மார்க் மட்டுமே வாங்குகிறார்.

இதைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்களாக வரும் நால்வரிடமிருந்து தேர்ந்த நடிப்பை வாங்கத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி?

இரவு நேரக் காட்சிகளுக்கான லைட்டிங் தொடங்கி இந்த க்ரைம் த்ரில்லர் படத்திற்குப் பக்குவமான 'த்ரில்' டிரீட்மென்ட் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் எம். ஹென்றி.

நான்-லீனியர் கதையைப் பரபரப்பூட்டும் த்ரில்லராகக் கோக்கத் தவறிய படத்தொகுப்பாளர் துரை பிரகாஷ், ஆங்காங்கே ஜம்ப் ஆகும் காட்சிகளைக் கவனிப்பதிலும் கோட்டைவிட்டிருக்கிறார்.

இன்ட்ரோ காணொளியின் பின்னணி இசையில் மட்டும் த்ரில்லூட்டும் இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ்பிரதாப், பின்னணி இசையால் பரபரப்பைக் கூட்ட வேண்டிய காட்சிகளில் ஆப்சென்ட் ஆகியிருக்கிறார்.

Regai Web Series ReviewRegai Web Series Review

வெற்றியின் கதை, அவருக்கு நெருக்கமான இளைஞரின் மரணம், அதற்குப் பின்னாலிருக்கும் காரணங்கள் போன்றவற்றை நான்-லீனியர் வடிவத் திரைக்கதையாகக் கோத்திருக்கிறார் இயக்குநர் தினகரன்.

மெடிக்கல் விஷயங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும் பேசியது, காட்சிகளின் டீட்டெய்லிங்கிற்கு உதவியிருக்கிறது.

ஆனால், நாவல் கதையை சமகாலத் திரைவடிவத்திற்கேற்ப மாற்றாமல் அப்படியே திரைக்கதையாக விரித்திருப்பது மைனஸ்.

திரைக்கதையில் பல அடுக்குகள் இருந்தாலும் அவற்றில் புதுமையை குற்றவாளிகளைத் தேடுவது போலத் தேட வேண்டியதாகிறது.

இந்த க்ரைம் த்ரில்லர் கதை முக்கியத் திருப்பத்தைச் சந்திக்கும் இடத்திற்குப் பிறகான காட்சிகளில் பரபரப்பு என்பது நடிகர்களின் நடிப்பில் மட்டுமே தென்படுகிறது. திரைக்கதையில் நோ!

Regai Web Series ReviewRegai Web Series Review

திரைக்கதையில் மட்டுமல்ல, கதாபாத்திர வடிவமைப்பிலும் இப்படியான க்ளிஷே விஷயங்கள் தொடர்ந்திருப்பது சில காட்சிகளை அதீத க்ரிஞ்ச் மீட்டருக்கு இட்டுச் செல்கிறது.

தொடரின் பிரதான ட்விஸ்ட்டைத் தொடக்கத்திலிருந்து விடாப்பிடியாகக் காட்சிப்படுத்துவது, பின்னால் வரும் ட்விஸ்ட்களை எளிதில் யூகிக்க வைக்கிறது.

முழு தொடரிலும் தலைதூக்கும் லாஜிக் விஷயங்கள் அனைத்திற்கும் சரியான விளக்கம் தந்திருப்பது மட்டுமே பெரும் ஆறுதல்.

ராஜேஷ் குமாரின் நாவலை சமகாலத்திற்கேற்ப மாற்றத் தவறியது, மேம்போக்கான மேக்கிங் உள்ளிட்ட அடுக்கடுக்கான பிரச்னைகள் 'ரேகை'யின் சுவாரஸ்ய சாட்சியங்களை அழிப்பதோடு, ஏனைய சுவாரஸ்ய தடயங்களையும் சேர்த்து அழிக்கின்றன.9MM குறும்பட திரையிடல்: "ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது" - சினிமா பிரபலங்கள் பாராட்டு
Read Entire Article