Revolver Rita Review: சொல்லியடிக்கும் டார்க் காமெடி தோட்டாவா? வானத்தை நோக்கி சுடப்பட்ட குண்டா?!

4 weeks ago 2
ARTICLE AD BOX

புதுச்சேரியில் ஒரு துரித உணவகத்தில் வேலை செய்யும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்), தன் தாய் செல்லம்மா (ராதிகா சரத்குமார்) இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் மிடில் கிளாஸ் பெண்.

அவரின் சகோதரியின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கும்போது, பாலியல் தொழிலாளியின் வீட்டிற்குச் செல்லும் தாதா டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்பராயன்), போதையில் வழிமாறி இவர்கள் வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறான்.

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

இந்தப் பதற்றமான சூழ்நிலையில் நடக்கும் அடித்தடியில் தாதா பலியாகிறான். இதே நேரத்தில் ஓர் உள்ளூர் கூலிப்படை, மற்றொரு ஆந்திர தாதாவுக்கு அன்றைய நாளில் பாண்டியனின் தலையை வெட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறது.

அதேபோல பாண்டியனின் மகன் டிராகுலா பாபி தந்தையைக் காணவில்லை என்று தேடுகிறான். மேலும் உள்ளூர் காவல்துறை ஆய்வாளரிடமும் ரீட்டாவுக்கு முன்பகை இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே ‘ரிவால்வர் ரீட்டா’.

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

குடும்ப டிராமாவும் கும்பல் காமெடியும் கலந்து எந்த உணர்வுகளையும் திணிக்காமல், இயல்பான டார்க் டோனால் சமநிலையாகக் கடத்த முயற்சி செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் மாஸ் சீன்கள் வைத்த குறி தவற, சற்றே செட் ஆகாத உணர்வே கொடுக்கிறது.

கொடுத்த ஆறு குண்டுகளையும் இலக்கை நோக்கி அடித்தது போல செல்லம்மாவாக ராதிகா சரத்குமார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் தியேட்டரும் சேர்ந்தே சிரிப்பலைகளில் ஆர்ப்பரிக்கிறது.

சுனில் வருகின்ற காட்சிகளில் எல்லாம் ‘மாஸ்’ பிஜியம்மையும் சேர்த்தே கொண்டுவந்தாலும், டிராகுலா பாபியாக நடிப்பில் அவர் கக்கிய நெருப்பு, இந்த ஜானருக்கான அடுப்பைப் பற்றவைக்கவில்லை.

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனில் ஜான் விஜய், அதே இரைச்சலான மாடுலேஷனில் ரெடின் கிங்ஸ்லி என இருவருமே நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்.

அதீத மிகை நடிப்பு, சிரிப்புக்கு உதவும் எனக் கத்திக்கொண்டே இடம்மாறிச் செல்லும் அஜய் கோஷ், இறுதிக் காட்சியில் சரியான இடத்திற்கு வந்து சேர்வது போலச் சிரிப்பையும் அப்போதே கொண்டு சேர்கிறார்.

இவர்கள் தவிர சென்ட்ராயன், அகஸ்டின் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு..." - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்

காட்சிக் கோணங்களிலும், ஒளியுணர்விலும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.பி. ஆனால், மாஸ் மற்றும் சேஸ் காட்சிகளில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். உதாரணமாக க்ளைமாக்ஸில் நாற்காலி போட்டு கீர்த்தி உட்காரும் காட்சியைச் சொல்லலாம்.

பன்முனை கதைசொல்லலைக் குழப்பாமல் கொடுக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இடைவேளை நெருங்கும் பகுதியில் ஏற்கெனவே புரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் வசனத்தில் மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியைக் கத்தரி போட்டிருக்கலாம்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காவிட்டாலும், பின்னணி இசை கதையைத் தொந்தரவு செய்யவில்லை. டிராகுலா பாண்டியன் வீடு, ரீட்டா வீடு ஆகிய இடங்களில் கலை இயக்குநர் MKTயின் உழைப்பு தெரிகிறது.

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

ஒரு எதிர்பார்க்கும் கொலை, எதிர்பாராத நிகழ்வு ஆகியவற்றை வைத்து டார்க் காமெடி ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே சந்துரு.

ஆனால் சாதாரண பெண்கள் பெரிய சிக்கலில் மாட்டினால் என்ன நடக்கும் என்கிற பாணியில் கதை நகராமல், மாஸ் மீட்டரில் அதைச் சாதாரண பிரச்னையாக அணுகியது ஏனோ?! ஆரம்ப காட்சிகளில் இறந்த உடலை எப்படி மறைப்பார்கள் என்ற மீட்டரில் சுவாரஸ்யமடைகிறது திரைக்கதை.

Keerthy Suresh: "தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரியான படத்தைப் பேச முடியும்"- கீர்த்தி சுரேஷ்

குலுங்கிச் சிரிக்க வேண்டிய காட்சிகள் எழுத்திலிருந்தாலும் அது மீமிகை செய்யப்பட்ட வசன உச்சரிப்பாலும், ஸ்டேஜிங் போதாமையாலும் தடுமாறுகிறது.

இதனாலேயே வந்த சுவாரசியம் ‘வானத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டாக’ வீணாகிறது. ராதிகா ஆங்காங்கே செய்கின்ற சேட்டைகள் மட்டுமே சற்று ஆறுதல். இடைவேளைக்கு இடைவேளை விடும் அளவுக்கு ‘மீண்டும் மீண்டுமா’ என்று வசனங்கள் குவிகின்றன.

இந்த ட்ரீட்மென்ட் இரண்டாம் பாதியிலும் தொடர்வதுபோல, காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல துணைக்கதையாக வரும் தந்தையின் தற்கொலை மேட்டர், திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில், அதை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

கும்பல் மோதல்களைச் சேர்க்கும் விதம், ஜான் விஜய் விசாரணை ஆகியவை திரைக்கதையாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதேபோல இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது.

பல கதாபாத்திரங்கள் அதற்கான நோக்கங்கள் எல்லாம் சரியாக இருந்தும் அது திரைக்கதையில் தரவேண்டிய நகைச்சுவை உணர்வு மட்டும் காணாமல் போனது படத்தின் பெரும் பலவீனம்.

மொத்தத்தில் எழுத்தில் டார்க் ஹ்யூமரைச் சரியாகக் குறி வைத்த ‘ரிவால்வர் ரீட்டா’, ஆக்கத்தில் அதைத் தவறவிட்டதால் காமெடி திருவிழாவாக மாற வேண்டிய நாள், சாதாரண நாளாக மாறிப்போனது.

Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்
Read Entire Article