Rohit Sharma : ஓய்வு பெறுகிறாரா ரோஹித் சர்மா? - பிசிசிஐயின் திட்டம் என்ன?

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

Rohit

கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் அறிவித்துவிட்டார். அதேமாதிரி, இங்கேயும் நடக்குமா என்பதே ரசிகர்களுடைய கேள்வியாக இருக்கிறது.

அப்படி நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதைத் தவிர்க்கவே முடியாது. ஏனெனில், ரோஹித் அவரது கரியரின் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டார். பிட்னஸாகப் பார்த்தாலும் கோலி அளவுக்கு அவர் உடற்தகுதியோடு இல்லை. மேலும், இந்திய அணியில் அவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்? அவருக்கான பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனாக எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாத காலக்கட்டமாக கொஞ்ச காலம் அவருக்கு அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

தொடர் தோல்விகளால் உலகக்கோப்பையை வென்ற 6 மாதத்துக்குள்ளாகவே ரோஹித்தை நோக்கி கடும் விமர்சனங்கள் பாயத் தொடங்கின. பிசிசிஐ யுமே இந்திய அணியில் அவரின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. உச்சபட்சமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் அவர் தன்னையே டிராப் செய்து கொண்டார். ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது. அது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பமாக இருக்கும். அதற்கு ரோஹித்தைக் கேப்டனாக வைத்திருக்க பிசிசிஐ விரும்புமா என தெரியவில்லை.

Ind v Nz : 'நியூசிலாந்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!' - என்னென்ன தெரியுமா?

வேறொரு புதிய கேப்டனோடு செல்லவே பிசிசிஐ விரும்பும். அப்படி நடக்கும்பட்சத்தில் ரோஹித் கையில் ஓடிஐ போட்டிகள் மட்டும்தான் இருக்கும். இந்த ஆண்டில் இதற்கு பிறகு ஒற்றை இலக்கத்திலான ஓடிஐ போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி ஆடப்போகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இருக்கிறது. அதனால் டி20 போட்டிகளில்தான் இந்திய அணி அதிகமாக கவனம் செலுத்தும். 2027 இல் தான் அடுத்த ஓடிஐ உலகக்கோப்பை நடக்கவிருக்கிறது. ஆக, அதுவரைக்குமான ஆப்சனாக ரோஹித்தை பிசிசிஐ பார்க்குமா என்றும் தெரியவில்லை. அந்த ஓப்பனிங் ஸ்லாட்டுக்கு ஜெய்ஸ்வால் காத்துக் கொண்டிருக்கிறார். ருத்துராஜ் மாதிரியான வீரர்கள் வாய்ப்புக்காக வெளியில் நிற்கிறார்கள். அப்படியிருக்க இந்த சாம்பியன்ஸ் டிராபியோடு ரோஹித்தைத் தாண்டி யோசிக்கவே பிசிசிஐ விரும்பும்.

Rohit

எப்படியிருந்தாலும் இந்திய அணி இந்தப் போட்டியை வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும்பட்சத்தில் ஓய்வு முடிவை எடுக்கும் வாய்ப்பு ரோஹித்தின் கையிலேயே இருக்கும். ஒருவேளை தோற்றால் ரோஹித்தின் எதிர்காலம் பற்றி பிசிசிஐயே முடிவெடுக்கும்.

எதுவாகினும் இன்று இரவு ஒரு தெளிவான முடிவு கிடைத்துவிடும்.

ரோஹித் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்த உங்கள் கருத்தைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.

Read Entire Article