Sharath Kamal : 'தோனியையும் என்னையும் ஒப்பிடவே முடியாது!' - ஓய்வு பெற்ற சரத் கமல் பேட்டி

9 months ago 8
ARTICLE AD BOX

இந்திய டேபிள் டென்னிஸின் முகமாக திகழும் தமிழக வீரர் சரத் கமல் டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

சரத் கமலுக்கு 43 வயதாகிறது. 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸ்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஒரு ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு 'ஒலிம்பியன்' என்கிற பட்டத்தை வாங்குவதே பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அப்படியிருக்க 5 ஒலிம்பிக்ஸ்களில் கலந்துகொள்வதெல்லாம் அசாதாரண விஷயம். உலகம் முழுவதுமிருந்து வெகு சில வீரர் வீராங்கனைகளே இந்த சாதனையை செய்திருக்கின்றனர். சரத் கமலை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நாற்பதை கடந்த அயர்ச்சி எதுவும் இல்லாமல் இன்னமும் இளம் வீரரை போலவே துடிப்போடும் உற்சாகத்தோடும் இருக்கிறார்.

Sharath Kamal

``பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரை ஆடிவிட்டீர்கள். இந்த சமயத்தில் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கான காரணம் என்ன?”

``நான் இன்றைக்கே ஓய்வுபெறப் போவதில்லை. மார்ச் 25 முதல் 30 ஆம் தேதி வரை WTT World Contender என்கிற தொடர் சென்னையில் நடக்கப்போகிறது. அதுதான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும். என்னுடைய ரசிகர்களும் என்னை பின் தொடர்பவர்களும் என்னுடைய கடைசித் தொடரை மகிழ்ச்சியாக அனுபவித்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்போதே ஓய்வு முடிவை அறிவித்தேன். இந்தியாவில் எப்போதுமே நான் சிறப்பாக ஆடியிருக்கிறேன். இந்த கடைசித் தொடரிலும் சிறப்பாக ஆடுவேன் என நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்காக என்னால் முடிந்த வரை சிறப்பாக ஆடிவிட்டேன். ஓய்வுபெற்ற பிறகு ஒரு நிர்வாகியாக வீரர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சியாளராக வருங்கால சந்ததியினருக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். 5 முறை ஒலிம்பிக்ஸில் கலந்திரிந்தாலும் ஒலிம்பிக்ஸ் மெடலை மட்டும் வென்றதே இல்லை. இளம் வீரர்களுக்கு வழிகாட்டி அவர்களின் மூலம் என்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வேன் என நினைக்கிறேன்.”

``உங்களுக்கு 43 வயதாகிறது. எல்லாரும் உங்களின் உடற்தகுதியை வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் மனரீதியாகவும் வலுவாக இருந்திருக்கிறீர்கள். அதனால்தான் பல்வேறு ஏற்ற இறக்கங்களை தாண்டி 20 ஆண்டுகளுக்கு மேலாக உங்களால் டேபிள் டென்னிஸ் ஆட முடிந்திருக்கிறது இல்லையா?”

``விளையாட்டில் எப்போதுமே மனநல ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெற்றிகரமான வீரராக இருக்க மனரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். என்னுடன் ஆடிய எல்லா வீரர்களுமே என்னைப் போலவே தினமும் 6-8 மணி நேரம் பயிற்சி செய்வார்கள். ஆனால், அவர்களால் இவ்வளவு பெரிய கரியரை உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. காரணம், மனரீதியான ஆரோக்கியத்தில் சறுக்கியிருப்பார்கள். எனக்கும் ஆரம்பத்தில் இதைப் பற்றி எந்த ஐடியாவும் இல்லை. காலம் செல்ல செல்லத்தான் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பதும் எவ்வளவும் முக்கியம் என்று தெரிந்தது. எதோ ஒரு விளையாட்டை பற்றிக் கொண்டு ஆட ஆரம்பித்தாலே நாம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பக்குவப்பட ஆரம்பித்து விடுவோம் என நினைக்கிறேன்.

நீங்கள் விளையாட்டில் சாம்பியன் ஆக வேண்டும் என்றெல்லாம் இல்லை. எதோ ஒரு விளையாட்டை ஆடினால் போதும். ஆடுங்கள்.”

Sharath Kamal

``ஓய்வு அறிவிப்பை சொல்லும் போதும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சீன வீரர் மலாங்குக்கு எதிராக நீங்கள் ஆடிய ஆட்டத்தை குறிப்பிட்டீர்கள். உங்களுடைய கரியரின் சிறந்த ஆட்டம் அதுதான் என நினைக்கிறேன். அந்த ஆட்டத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.”

``ஆம், நீங்கள் சொல்வதைப் போல அதுதான் என்னுடைய கரியரின் ஆகச்சிறந்த போட்டி. சீனாவின் மலாங்குக்கு எதிராக அதற்கு முன்பு நான் 5 முறை மோதியிருந்தேன். ஒரு கேமை கூட நான் வென்றதில்லை. எனக்கும் மலாங்குக்கும் போட்டி என தெரிந்தவுடன் கொஞ்சம் சோர்ந்துவிட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு ஒலிம்பிக்ஸ் வரை வந்து இவரிடம் தோற்பதா என நினைத்தேன். அப்போதுதான் என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு ஊக்கமளித்தார்கள்.

Sharath Kamal: `சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிக்கிறேன்' - 5 ஒலிம்பிக்ஸ் ஆடிய சரத் கமல் ஓய்வு

'இதற்கு முன் நீ அவரிடம் தோற்றிருக்கலாம். ஆனால், இப்போது போட்டி 0-0 என்றுதானே தொடங்கப்போகிறது? போராடு, அவர் 11 புள்ளிகள் எடுத்து கேமை வெல்லட்டும். ஆனால், அந்த 11 புள்ளிகளை அவ்வளவு எளிதாக கொடுத்துவிடாதே.' என உந்துதல் கொடுத்தனர். நானும் போராடும் முனைப்போடு சென்றேன். முதல் கேமை அவர் வென்றார். இரண்டாவது கேமை நான் விடவே இல்லை. அடித்து ஏறி வென்றேன். மூன்றாவது கேம் பரபரப்பாக சென்றது. டை பிரேக்கர் வரை சென்றது. மலாங் டைம் அவுட் எடுத்து யோசித்தார். அதன்பின் தான் வென்றார். அன்றைக்கு மலாங் திணறினார். அதுதான் என்னுடைய வெற்றி. அதை என்னால் மறக்கவே முடியாது.”

Dhoni

``கிரிக்கெட்டோடு ஒப்பிடுகையில் மற்ற விளையாட்டுகளின் வளர்ச்சி அவ்வளவு பெரிதாக இல்லையே. நீங்களும் தோனியுமே கூட ஒரே சமயத்தில்தான் சர்வதேச விளையாட்டு பயணத்தை தொடங்கினீர்கள். அவரும் இப்போது 'One Last Time' என்கிறார். ஆனால், கிரிக்கெட்டுக்கும் டேபிள் டென்னிஸூக்கும் இருக்கும் ஈர்ப்பை ஒப்பிடவே முடியவில்லையே.”

``கண்டிப்பாக, கிரிக்கெட்டை மற்ற விளையாட்டுகளோடு ஒப்பிட முடியாது. ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் கால்பந்து பிரபலமான விளையாட்டாக இருக்கும். இங்கே கிரிக்கெட் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. எப்போதுமே ஒரு விளையாட்டு பிரபலமாக வேண்டுமெனில், அந்த விளையாட்டில் சூப்பர் ஸ்டார்கள் உருவாக வேண்டும். அந்த சூப்பர் ஸ்டார்கள் பதக்கங்களை வெல்ல வேண்டும். அப்போதுதான் அந்த விளையாட்டு மக்கள் மத்தியில் வளரும். கிரிக்கெட்டோடு ஒப்பிடாமல் டேபிள் டென்னிஸை மட்டும் பாருங்கள். நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் டேபிள் டென்னிஸ் வீரர்களை பேட்டி கூட எடுக்கமாட்டார்கள். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இளம் வீரர்கள் இந்த வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும்.”

``ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?”

``தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தோடு இணைந்து High Performance Center அமைக்கவிருக்கிறேன். அதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் வீரர் வீராங்கனைகள் இங்கே வந்து பயிற்சி பெறும் சூழலை ஏற்படுத்த வேண்டும். சர்வதேச பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் நிபுணர்கள் ஆகியோரை வைத்து இளைஞர்களின் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் வழி உலக அரங்கில் இந்தியாவை டேபிள் டென்னிஸில் மிகப்பெரும் சக்தியாக உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத்தான் எடுக்கப்போகிறேன்.”

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article