South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'

6 months ago 7
ARTICLE AD BOX

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்று நிற்கும். கிராண்ட் எலியாட் தென்னாப்பிரிக்கக்காரர். நியூசிலாந்துக்கு குடியேறியவர். அவர் அடித்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருப்பார். டீவில்லியர்ஸ், மோர்னே மோர்கல் என தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர்களெல்லாம் தோல்வியின் விரக்தியில் உடைந்து போய் கண்ணீர் சிந்திய சித்திரம் இன்னமும் மனதிலிருந்து அகலவில்லை.

Temba BavumaTemba Bavuma / WTC

க்ளைமாக்ஸ்?

பெரிய தொடர்களில் தென்னாப்பிரிக்காவின் முடிவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். க்ளாஸாக ஆடும் வீரர்களுடன் வலுவான அணியை கட்டமைத்து வைத்திருப்பார்கள். ஆனால், க்ளைமாக்ஸ் எப்போதும் ஒன்றுதான். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையுமே அப்படித்தானே. இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் க்ளாசென் வெற்றியை நோக்கி வேகமாக அழைத்துச் செல்வார். ஆனால், கடைசியில் சரிந்து விழுந்து தோற்றிருப்பார்கள். எதோ சபிக்கப்பட்ட அணியைப் போன்றே இருப்பார்கள்.

கடாயுதத்தை கையில் ஏந்தி நிற்கிறார்

இதனால்தான் 'Chokers' என்ற அடைமொழி அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டது. ஆனால், இனியும் அவர்களை அப்படி அழைக்க முடியுமா என தெரியவில்லை. இதோ அந்த கிரிக்கெட்டின் பிறப்பிடமான லார்ட்ஸில் பெரிய தருணங்களை தவறவே விடாத ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஸ் கடாயுதத்தை கையில் ஏந்தி நிற்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா.

Temba BavumaTemba Bavuma

ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணியுமே கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், அதில் பவுமா இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், பவுமா என்கிற பெயர்தான் இந்த வெற்றி அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதற்கான ஆதாரமாக இருக்கிறது. பவுமா கருப்பினத்தைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்க அணியின் முதல் முழுநேர கருப்பின கேப்டன் அவர்.

நிறவெறி உச்சக்கட்டத்தில் இருந்த போது...

கேப்டவுனிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது லங்கா என்கிற ஊர். லங்கா ஓர் கருப்பர் நகரம். 99% கருப்பின மக்கள் மட்டுமே வாழக்கூடியப் பகுதி. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சக்கட்டத்தில் இருந்த போது உழைக்கும் வர்க்கமான கருப்பினத்தவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். கேப்டவுனில் வேலை பார்க்கக்கூடிய கருப்பினத்தவர்கள் அங்கே தங்க முடியாது. தங்களின் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு அவர்கள் நகருக்கு வெளியே சென்றுவிட வேண்டும்.

Temba BavumaTemba Bavuma

அப்படி நகருக்கு வெளியே அவர்கள் குழுவாக தங்கியிருந்த இடம்தான் லங்கா. அங்கேதான் தெம்பா பவுமாவும் பிறந்தார். ஏழ்மை குடிகொண்டிருக்கும் பின் தங்கிய பகுதி. மக்கள் நிறவெறியால் அடக்கப்பட்டனர். அரசே அவர்களை ஒடுக்கியது. இளம் சிறுவர்களின் வாழ்க்கை ஒளியற்ற இலக்கை நோக்கி நகர்ந்தது. மண்டேலாவின் எழுச்சிக்குப் பிறகுதான் பவுமா பிறக்கிறார்.

ஆனாலும் ஆண்டாண்டு காலமாக முதுகில் ஊறிக்கொண்டிருந்த நிறவெறி கிருமியின் தாக்கம் இன்னமுமே அந்த மண்ணிலிருந்து அகலவில்லை. பவுமாவின் அப்பா ஒரு பத்திரிகையாளர். கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட உறவினர்கள் அவருக்குண்டு. இதனால் அந்த லங்காவின் இருளைக் கிழித்துக் கொண்டு வெளியே வர பவுமாவுக்கு ஒரு பிடிப்பு கிடைக்கிறது. ஆனாலும் கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் நிறைய தடைகளை தாண்டி வர வேண்டியிருந்தது.

Temba BavumaTemba Bavuma

கருப்பினத்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தகர்க்கும் வகையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்க அணியில் குறைந்தபட்சமாக 2 வீரர்களாவது கருப்பினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடுதான் கிரிக்கெட்டில் கருப்பினத்தவர்களின் பங்களிப்பையும் உறுதி செய்தது.

குரூர கண்கொண்டு பார்ப்பவர்கள் குறையவில்லை

இதிலும் சிக்கல்கள் இருந்தது. தெம்பா பவுமா இப்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன். அணியை ஒரு பெரிய தொடரின் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால், இன்னமும் அவரை 'நீ கீழானவன்தான்!' என குரூர கண்கொண்டு பார்ப்பவர்கள் குறையவில்லை.

Temba BavumaTemba Bavuma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூட, 'கருப்பினத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிரண்டு போட்டியில் ரன்களோ விக்கெட்டுகளோ எடுக்காமல் விட்டால் கூட கோட்டா ப்ளேயர்கள் என முத்திரைக் குத்தி விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' எனக் கூறியிருக்கிறார். ஆக இன்னமும் அவர் மீது என்ன மாதிரியான அடக்குமுறை மறைமுகமாக தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இதையெல்லாம் கடந்துதான் பவுமா இன்னும் களத்தில் நிற்கிறார். பவுமாவின் வெற்றி, பவுமாவின் எழுச்சி ஒட்டுமொத்த கருப்பினத்துக்குமேயான நம்பிக்கை, உந்துசக்தி. தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே பவுமாவுக்கு போராட்டமாகத்தான் இருந்தது. மற்ற வீரர்கள் காயமடைகையில் அவர்களுக்கு பதிலாக ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பே அவருக்கு கிடைக்கிறது. பவுமா ஒன்றும் அசாதாரண ஆட்டத்தை ஆடிவிடவில்லை.

Temba BavumaTemba Bavuma

அவர் ஆடும் விதமும் அத்தனை வலுவானதாக இருக்காது. அவர் ஹார்ட் ஹிட்டர் கிடையாது. ஆனால், க்ளாஸாக ஆட தெரியும். ஒவ்வொரு ரன்னுக்கும் உயிரைக் கொடுத்து உழைப்பைக் கொட்டும் தீர்க்கம் அவரிடம் இருந்தது. அதனால்தான் கடினமான பிட்ச்களில் அணிக்கு தேவையான பங்களிப்பை செய்துகொடுத்து தன்னுடைய இடத்தை நிலைப்படுத்திக் கொண்டார்.

2016 இல் அவர் பிறந்த லங்காவுக்கு அருகே இருக்கும் நியூ லேண்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் கருப்பின வீரர் ஒருவர் அடித்த முதல் சதம் அதுதான். மைதானத்தில் கூடியிருந்த லங்கா மக்கள் ஆனந்த கண்ணீர் விட்டு தங்களின் சாயலாக வென்று நிற்கும் பவுமாவை கொண்டாடினர்.

Temba BavumaTemba Bavuma

இதேமாதிரி எத்தனையோ சாதனைகளை முதல் நபராக பவுமா செய்திருக்கிறார். ஆனாலும் அவரை கொண்டாடியதை விட ஏளனம் பேசிய சம்பவங்களே அதிகம் நடந்திருக்கிறது. இப்போது ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருக்கிறார் இல்லையா. முன்பொரு முறை தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா சென்ற போது ஆஸ்திரேலிய ஊடகங்கள் தன்னுடைய உயரத்தை வைத்து கிண்டலடிக்கும் தொனியில் கேள்விகளை முன்வைத்ததை பவுமா மனமுடைந்து பேசியிருக்கிறார்.

இப்படியான வலிகள் நிறைந்த பயணத்தை கொண்ட ஒரு ஆள்தான் இந்த அணியை வழிநடத்த வேண்டும் என முடிவெடுத்தவர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கான்ராட். பவுமாவிடம் ஒரு உறுதித்தன்மையும் திடமான மனவலிமையும் இருப்பதையும் அறிந்தே கான்ராட் இந்த முடிவை எடுத்தார். அந்த முடிவுதான் இன்றைக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்திருக்கிறது.

Temba BavumaTemba Bavuma

பவுமா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு ஆசிரியர், 'இன்னும் 15 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்பதை எழுதிக் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். 'இன்னும் 15 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணியின் ஜெர்சியை அணிந்து கிரிக்கெட் ஆட வேண்டும். தென்னாப்பிரிக்க அணியில் இணைந்ததற்காக பிரதமரிடம் கைக்குலுக்கி வாழ்த்துப் பெற வேண்டும்.' என பவுமா தன்னுடைய கனவை எழுதியிருக்கிறார். பவுமா நினைத்தது அப்படியே பலித்திருக்கிறது.

அவர் தென்னாப்பிரிக்க ஜெர்சி அணிந்து ஆட மட்டும் செய்யவில்லை. தென்னாப்பிரிக்க அணியின் Chokers சாபத்தை போக்கி சாம்பியனே ஆக்கிவிட்டார். எல்லாவற்றுக்கும் மேல் தனது கனவில் வென்றதன் வழி, ஒட்டுமொத்த கருப்பின சமுதாயத்தின் சிறுவர்களுக்குமே கனவு காண்பதற்கான வெளியை திறந்துவிட்டிருக்கிறார்.

Temba BavumaTemba Bavuma

அத்தோடு எத்தனை அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மன வலிமையோடு நின்றால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். கருப்பினத்தவர்களை எல்லா மட்டத்திலிருந்தும் ஒதுக்கி அடக்கி வைத்திருந்ததுதான் நிறவெறி காலத்து கோர வரலாறு. பவுமா இப்போது அந்த வரலாற்றுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் 'Choker' முத்திரையை உடைத்தெறிந்தது யார் என கேள்வி கேட்டால், வரலாறு இனி கருப்பெழுத்துகளால் பதில் சொல்லும். 'சாம்பியன்' பவுமாவுக்கு வாழ்த்துகள்!

Chess: ``முதல்முறையாக நான் கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றிருக்கிறேன்" -அரவிந்த் சிதம்பரம்
Read Entire Article