ARTICLE AD BOX
18 வது ஐ.பி.எல் சீசன் பலத்த எதிர்பார்ப்போடு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், நடப்பு சீசனை ஒளிபரப்பவிருக்கும் Jio Hotstar நிறுவனம் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவுடன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு உரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. தோனியின் ஓய்வு பற்றிய ரகசியம் சொல்லவா எனப் பொடி வைத்து ஜாலியாகப் பேசினார்.
ஐ.பி.எல் பற்றி விரிவாக அவர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய பேட்டி இங்கே.
Dhoni and Rainaசென்னை அணியில் ருத்துராஜூடன் யார் ஓப்பனிங் இறங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? கான்வேயா அல்லது ரச்சினா?
ஓப்பனிங்கில் ஒரு இடது - வலது இணை இருக்க வேண்டும். கான்வேயும் இடதுகை பேட்டர்தான். ஆனாலும் அவரை விட ரச்சினைத்தான் நான் சிறந்த தேர்வாக நினைப்பேன். அவர்தான் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஸ்பின்னுக்கு உதவக்கூடிய சென்னை பிட்ச்சில் அவரால் நன்றாக பந்தும் வீச முடியும். என்னைப் பொறுத்தவரை ருத்துராஜூம் ரச்சினும்தான் ஓப்பனிங் இறங்க வேண்டும்.
Final winning knockரிஷப் பண்ட் இந்த முறை லக்னோ அணியில் இருக்கிறார். அவர்தான் கேப்டனும் கூட. அந்த அணியில் அவருடைய ரோல் எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும்? அவருக்கான சவால்கள் என்னென்ன?
லக்னோ அணியின் வெற்றியில் பங்களிக்கக்கூடிய முக்கியமான வீரராக இருப்பார். ஒரு கேப்டனாக நீங்கள் பார்த்தால்கூட துடிப்பாகச் செயல்படக்கூடிய கேப்டனாக இருப்பார். புதிது புதிதாக நிறைய விஷயங்களைச் செய்து பார்க்கக்கூடிய தலைவனாக இருப்பார். ஒரு பேட்டராக அவர் நம்பர் 3 இல் இறங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அந்த அணியில் எய்டன் மார்க்ரம், பூரன் என நிறைய பேட்டர்கள் இருக்கிறார்கள். அதனால் பண்ட் நம்பர் 4 இல் இறங்கி போட்டியை முடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்வார் என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக ரிஷப் பண்ட்டுக்கு நிறைய சவால்கள் இருக்கும். ஏனெனில், மயங்க் யாதவ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். மோஷின் கான் முழு உடற்தகுதியோடு இல்லை. ஆவேஷ் கானும் சரியான பார்மில் இல்லை. இதையெல்லாம் சமாளிக்க ரிஷப் பண்ட் நிறைய திட்டமிடல்களை செய்ய வேண்டும். ஜாகீர் கான் லக்னோ அணியில் இருக்கிறார். அவரின் அனுபவம் பண்ட்டுக்கு பெரியளவில் உதவும்.
பெங்களூரு அணிக்கு ரஜத் பட்டிதர் புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு உங்களுடைய ஆலோசனைகள் என்னென்ன?
நான் பார்த்த வரைக்கும் ரஜத் பட்டிதர் திறமையான வீரர். நன்றாக பேட்டிங் ஆடுவார். நிதானமாக வழிநடத்தும் பக்குவம் உடையவர். அதுபோக அவரது அணியில் விராட் கோலி, லிவிங்ஸ்டன், ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார் என தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ருத்துராஜூக்கு தோனியும், ஹர்திக்குக்கும் ரோஹித்தும் இருப்பதைப்போல ரஜத்துக்கு கோலி இருப்பார். கோலி டாப் ஆர்டரில் ஸ்கோர் செய்தாலே அழுத்தம் குறைந்துவிடும்.
Suresh Rainaபஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றதே இல்லை. இந்த முறை புதிய கேப்டனின் கீழ் அவர்கள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறதா?
பஞ்சாப் அணியில் திறமையான பேட்டர்கள் இருக்கிறார்கள். நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு ஸ்ரேயாஷின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர் பஞ்சாப் அணியின் வரலாற்றை மாற்றுவார் என நினைக்கிறேன். ரிக்கி பாண்டிங்கும் அவருடன் இருக்கிறார். பாண்டிங் தீர்க்கமாக திட்டங்களை வகுக்கக்கூடியவர். இவர்களின் கூட்டணியில் பஞ்சாப் அணி தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அதேமாதிரி, கொல்கத்தா அணிக்கு ரஹானே கேப்டன் ஆகியிருக்கிறார். அவருக்கு பின்னால் பெரும் அனுபவம் இருக்கிறது. அவரும் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நினைக்கிறேன்.
சிஎஸ்கேவில் நீங்கள் விட்டுச் சென்ற மிடில் ஆர்டர் இடத்தை யார் நிரப்பக்கூடும் என நினைக்கிறீர்கள். சென்னை அணி மிடில் ஓவர்களில் சிவம் துபேவை அதிகம் நம்பியிருக்கிறதோ?
இது ஒரு மிக முக்கியமான கேள்வி. சென்னை அணி எந்த மாதிரியான லெவனை தேர்ந்தெடுக்கும் என்பதை பொறுத்தே சொல்ல முடியும். சென்னை அணியில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். சென்னை மைதானத்தில் 7-11 இந்த ஓவர்களில் கொஞ்சம் நின்று நிதானமாக ஆட வேண்டும். என்னைப் பொறுத்தவரை ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், துபே என சென்னையில் மிடில் ஆர்டர் இருந்தால் நன்றாக இருக்கும். ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஆகியோரும் ஸ்பின்னர்களை நன்றாக ஆடக்கூடியவர்களே!
Suresh Rainaஜடேஜா, அஷ்வின் இருவரும் இப்போது சென்னையில் இருப்பதைப் பார்க்கையில், நீங்கள் சென்னை அணிக்காக ஆடிய பொற்கால நாட்கள் ஞாபகம் வருகிறதா?
ஆம், கண்டிப்பாக. நீங்களே பாருங்களேன். ஜடேஜா பந்துவீச தோனி கீப்பிங் செய்ய அஷ்வின் ஸ்லிப்பில் நிற்க ருத்துராஜ் கவர்ஸில் பீல்டிங் நிற்க அந்த சித்திரமே அற்புதமாக இருக்கும் இல்லையா, ஜடேஜா சாம்பியன்ஸ் டிராபியை வென்றுவிட்டு வந்திருக்கிறார். அஷ்வின் உள்ளூர் பையன். இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் இருக்கும். இவர்கள் இருவரும் ஆடுவதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
'One Last Time' என பொறிக்கப்பட்ட டீசர்ட்டோடு தோனி சென்னை வந்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி சீசனா? நீங்கள் அவரிடம் இதைப் பற்றி எதுவும் பேசினீர்களா?
நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நீங்கள் எல்லாரும் அவரின் பிட்னஸை பற்றி பேசுகிறீர்கள். ஆனால், அவரின் ஷாட் ஆடும் விதத்தை பாருங்கள். அவரின் பேட் சுழலும் வேகத்தைப் பாருங்கள். தோனி இப்போதும் ஆடுகிறார் எனில் அந்தத் திறன்தான் முக்கியம். ஐ.பி.எல் க்கு ஒரு மாதம் முன்பே சென்னை வந்துவிடுகிறார். தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார். நான் சென்னைக்கு ஆடியபோதே ஒருநாளைக்கு 3 மணி நேரம் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபடுவார். அதுதான் அவரை இன்னும் வலுவான வீரராக வைத்திருக்கிறது. இன்னும் ஒரு சீசனாவது ஆடி விட வேண்டும் என்பதில் தோனி தீர்க்கமாக இருக்கிறார்.
Suresh Raina - MS Dhoniஒரு ஐ.பி.எல் சீசனை வெல்ல என்னதான் செய்ய வேண்டும்? அதன் ரகசியம்தான் என்ன?
நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும். சீசனை வெல்ல மிக முக்கியமான தேவை 'Consistency'. அதனால்தான் சென்னை அணி கோப்பையை வென்றது. கடந்த முறை கொல்கத்தா கோப்பையை வென்றது. பில் சால்ட், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் என அந்த அணியில் அத்தனை பேரும் சீராக ஆடினார்கள். அதனால்தான் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. நீங்கள் சாம்பியன் ஆக வேண்டுமெனில் சீராக ஆட வேண்டும். தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். மற்ற அணிகளை விட ஒருபடி மேலே இருக்க வேண்டும்.
சென்னை Vs மும்பை போட்டியை பற்றிய உங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
கண்டிப்பாக அது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும். மும்பை அணியில் ஹர்திக் இருக்கப்போவதில்லை. சூர்யாதான் கேப்டன்சி செய்யப்போகிறார். அதுவே சென்னை அணிக்கு பெரிய பலம்தான். ஏனெனில், ஒரு பேட்டராக, பீல்டராக, பௌலராக ஹர்திக்கால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரத்தில் மிடில் ஓவர்களில் சென்னை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. அதில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். சாண்ட்னர் மும்பை அணியில் இருக்கிறார். அவருக்கு சென்னை அணி பற்றி முழுமையாகத் தெரியும். மொத்தத்தில் அந்தப் போட்டி அட்டகாசமாக இருக்கும்.
வழக்கமாக சென்னை vs மும்பை போட்டியின் மீதுதான் அதிக கவனம் இருக்கும். ஆனால், இந்த முறை சென்னை vs மும்பை போட்டியை விட சென்னை vs பெங்களூரு போட்டியின் மீதே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
சென்னை, மும்பை இரண்டு அணிகளுமே சாம்பியன்கள். அதனால்தான் அந்தப் போட்டி அத்தனை எதிர்பார்ப்புமிக்கதாகவும் அழுத்தம் உடையதாகவும் இருக்கிறது. பொல்லார்டாலும் ஹர்திக்காலும் சிக்சர்களைப் பறக்கவிட்டு போட்டியை மாற்ற முடியும். போல்டால் ஒரு சூப்பர் ஸ்பெல்லை வீசி போட்டியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதேமாதிரி, இந்தப் பக்கம் தோனியாலும் என்னாலும் போட்டியை மாற்ற முடியும். இருபக்கமும் சவாலளிக்கும் வீரர்கள் அதிகம் இருந்தோம். அதனால்தான் சென்னை - மும்பை போட்டி அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். விராட் கோலி இப்போது உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்றிருக்கிறார். நிறைய பக்குவமடைந்திருக்கிறார். 2011 உலகக்கோப்பையில் தோனியின் தலைமையின் கீழ் சச்சின் சுதந்திரமாக ஆடியதைப்போல இப்போது ரஜத்தின் தலைமையின் கீழ் கோலி ஆடுவார். அதனால் பெங்களூருவுக்கு எதிரான போட்டியும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

9 months ago
9







English (US) ·