ARTICLE AD BOX
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியை, ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய பவுலர்கள் இல்லாதபோதும் தனி ஒருவராக சாய்த்தார் மிட்செல் ஸ்டார்க்.
Australia vs English - Ashes33 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, வார்னர் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் யாரை ஓப்பனிங் இறக்கினாலும் கிளிக் ஆகாததால் ஓப்பனிங்கில் அவரையே ஒரங்கட்டிவிட்டு அறிமுக வீரர் நேதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்னஸ் லபுஷேனை இறக்கினார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே, முதல் ஓவரிலேயே மெக்ஸ்வீனி டக் அவுட் ஆனார். அங்கிருந்து சரிவர ஆஸ்திரேலியா இங்கிலாந்தை விட மோசமாக ஆடி முதல் நாள் முடிவில் 39 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஷஸ் தொடரின் கடந்த 100 வருட வரலாற்றில் முதல் முறையாக முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டியாக இது அமைந்தது.
அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 132 ரன்களில் 10-வது விக்கெட்டையும் ஆஸ்திரேலியா இழந்தது. அதைத்தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைப் போலவே அதிரடியாக ஆட முயன்று 35 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் ஓப்பனிங் செட் ஆகாததை உணர்ந்த ஸ்மித் லபுஷேனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட் டை ஓப்பனிங்கில் அனுப்பினார்.
Australia vs England - Ashesஹெட் அதிரடியாக ஆடி 69 பந்துகளில் சதமடிக்க, ஒன் டவுனில் நிதானமாக லபுஷேன் அரைசதமடிக்க 28 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா.
முழுமையாக இரண்டு நாள் கூட இல்லாமல் போட்டி முடிவுக்கு வந்தது. ஐந்து நாள் டெஸ்ட் போட்டி முழுமையாக இரண்டு நாள்களுக்குள் முடிந்தது விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு டாலர் மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் ஆகும்.

1 month ago
2







English (US) ·