ARTICLE AD BOX
‘தக் லைஃப்’ திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது.
ஆம், ரஹ்மான் இசைக்கு இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் மெட்டுக்கு கார்த்திக் நேத்தா பாடல் எழுதுவது இதுவே முதல் முறை.
Karthik Netha - Thug Lifeஅதுமட்டுமல்ல, மணி ரத்னம் - ரஹ்மான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவது அவருடைய 25 ஆண்டு கனவு என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படியான கனவுகள் யாவும் கார்த்திக் நேத்தாவுக்கு இப்போது கைகூடி வந்திருக்கிறது. இரட்டிப்பான மகிழ்ச்சியில் இருந்த கார்த்திக் நேத்தாவை சந்தித்துப் பேட்டி கண்டோம்.
மணி ரத்னம் - ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணிக்கு பாடல் எழுதுவது கனவு எனக் கூறியிருந்தீர்கள். இப்போது அவர்களின் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறீர்கள்! எவ்வளவு நிறைவாக இருக்கிறது?
நிறைவு என்பதைத் தாண்டி மணி ரத்னம் சார், ரஹ்மான் சார், கமல் சார் இணைந்து எனக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு எனக்கு அச்சத்துடன் சேர்த்து பொறுப்புணர்வையும் உண்டாக்கியிருக்கிறது. அதுவும் ஒரு நிறைவான விஷயம்தான். இப்படத்தில் நான் எழுதியிருக்கும் இரண்டு பாடல்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்த்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நண்பன் சிம்புவுக்கும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடல்கள் எழுதுகிறேன். இத்தனை வருடங்களில் பெரிய வளர்ச்சியை அவர் எட்டியிருக்கார். அதுமட்டுமின்றி, மனிதராகவும் இப்போது கனிந்து வருகிறார். கலையின் நோக்கமும் அதுதான்!
Karthik Netha - Thug Lifeமூன்றாம் பிறை படத்தின் ‘கண்ணே கலைமானே’ பாடல்தான் நீங்கள் சினிமாவுக்குள் வருவதற்கு முக்கியமானது எனச் சொல்லியிருந்தீர்கள்! அந்தப் பாடலை முதல் முறையாகக் கேட்டபோது உங்களுக்குள் ஏற்பட்ட உணர்வு நினைவில் இருக்கிறதா?
என்னுடைய ஊரில் எப்போதும் கண்ணதாசன் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். கிராமங்களிலுள்ள வீடுகளின் வாசலில் திண்ணைகள் இருக்கும். வீட்டிற்குள் கண்ணதாசனுடைய வரிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். என்னுடைய குழந்தைப் பருவத்தில் அவருடைய பாடல்கள்தான் நிறைந்திருக்கும். அந்த ‘கண்ணே கலைமானே’ பாடலில் ‘ஊமை என்றால் ஒரு வகை அமைதி. ஏழை என்றால் அதிலொரு அமைதி’ என்ற வரியை அவர் எழுதியிருப்பார். ஒரு வெள்ளந்தியான மனநிலையோடு அந்த வயதில் இந்த வரியைக் கேட்கும்போது என்னை ஏதோ அமைதியாக்கிவிடும். இன்றும் இந்த வரிகளைக் கேட்கும்போது ஊரில் பம்பரம் சுற்றிக் கொண்டிருந்த கார்த்திக் என் மனதிலிருந்து எட்டிப் பார்ப்பான். கண்ணதாசன் தன்னுடைய பாடல்களிலும், வாழ்க்கையிலும் காட்டிய எளிமையை என்றைக்காவது நானும் செய்துவிட வேண்டும்.
ஏ. ஆர். ரஹ்மான் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான பாடல்கள் உங்களுக்கு எந்தளவுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது?
அந்தக் கூட்டணி எனக்குப் பிடித்த ஒன்று. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவராக என்னுடைய சகோதரர் அசோக் பிரசன்னா இருக்கிறார். அவர்தான் என்னுடைய கனவை எனக்கே உணரச் செய்தவர். நான் சினிமா கனவுகளோடு சென்னைக்கு வரும்போது பல இயக்குநர்கள், பாடலாசிரியர்களின் முகவரிகளை அவர்தான் சேகரித்துக் கொடுத்தார். அந்த முகவரிகளில் முதலில் இருந்தது ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் மணி ரத்னம் சாரின் முகவரிகள்தான். இந்தக் கூட்டணிக்கு பாடல் எழுத வேண்டும் என்பது எங்களுடைய இருவரின் கனவும்தான். முக்கியமாக, இந்தக் கூட்டணியில் சூழலுக்கு தேவைப்படாத பாடல்கள் இருக்காது. அத்தோடு இவர்களின் பாடல்கள் திரைக்கதையோடு பின்னப்பட்டதாக இருக்கும்.
Karthik Netha - Thug Lifeவிண்வெளி நாயகா பாடல் உருவானது பற்றி?
இந்தப் படத்திற்காக நான் முதலில் எழுதியது ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடல்தான். மணி ரத்னம் சார் இந்தப் பாடலுக்கு என்ன சொல்லப்போகிறார் என யோசித்துக் கொண்டிருக்கும்போது ‘Okay Karthik, Shall we go for next song’ எனக் கேட்டார். மணி சார் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியது எனக்கு இரண்டு ஆஸ்கர் விருது வாங்கியதற்கு சமம். இந்தப் பாடலுக்கான டியூனை அனுப்பும்போதே அதில் `ஸ்பேஸ் ஹீரோ' என்றுதான் பெயரிட்டிருந்தது. அந்த வார்த்தையை வைத்து இந்தப் பாடலைத் தொடங்கச் சொன்னார்கள். அப்படித்தான் ‘விண்வெளி நாயகா’ பாடல் உருவானது. அந்தப் பாடலை எழுதும்போது எனக்கு கமல் சார் நினைவுக்கு வரவே இல்லை. மணி சார் என்னிடம் முழுமையாக சக்திவேல் கேரக்டரைப் பற்றிதான் சொல்லியிருந்தார். அதனால் எனக்கு கமல் சார் நினைவுக்கு வரவில்லை. அதுவும் நல்லது என்றே நினைக்கிறேன்.
அஞ்சு வண்ணப் பூவே பாடல் பற்றி...
அஞ்சு வண்ணப் பூவே பாடலை என் தாயை நினைத்துதான் நான் எழுதினேன். என்னுடைய தாய் என்னிடம் ‘கார்த்தி, இந்த உலகத்துல நீ எப்படி பிழைப்போறனு தெரில கார்த்தி’ எனச் சொன்னார். அதுபோல ஒரு தாய் தன் மகனை எண்ணிக் கேட்பதே இந்தப் பாடல். பேனாவை மட்டும்தான் நான் வைத்தேன். ஏதோ, மாயக் கரங்கள் அந்தப் பாடலை முழுமையாக விரித்து எழுதியது.
Karthik Netha - Thug Lifeமணி ரத்னம் - ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணியில் பாடல் எழுத வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. வேறு எந்தக் கூட்டணிக்கு பாடல் எழுத ஆசை உங்களுக்கு?
எனக்கு பாலுமகேந்திரா சாருக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘கண்ணே கலைமானே’ பாடல் வரும் ‘மூன்றாம் பிறை’ படத்தின் இயக்குநர் அவர்தானே... ஆனால், இன்று நம்முடன் அவர் இல்லை. அவருக்கு பாடல் எழுத முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது.
Karthik Netha - Thug Lifeஎந்த சூழல் உங்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்காது? எந்த சூழல் உங்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும்?
எனக்கு தாலாட்டு பாடல்களை எழுதுவதற்குப் பிடிக்கும். அப்படியான பாடல்கள் எழுதுவது எனக்கு என்றைக்கும் அயர்ச்சியைக் கொடுக்காது. அயர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு நான் இன்னும் பாடல்கள் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்).
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

6 months ago
8





English (US) ·