Travis Head : முதல் பந்திலேயே ஹெட்டின் விக்கெட் - சம்பவம் செய்த வருண் சக்கரவர்த்தி!

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணிக்கு எப்போதுமே தனது அதிரடி ஆட்டத்தால் தொல்லை கொடுக்கும் ஹெட்டின் விக்கெட்டை இந்திய அணி பவர்ப்ளேக்குள்ளாகவே எடுத்திருக்கிறது. வருண் சக்கரவர்த்தி ஹெட்டுக்கு வீசிய முதல் பந்திலேயே அவரின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார்.

Head

ஹெட்டை இந்திய அணியும் இந்திய அணியின் ரசிகர்களும் மறக்கவே மாட்டார்கள். கடந்த 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி கட்டாயமாக வெல்லும் என்கிற போது இந்திய அணியின் கனவை கலைத்தவர். சதமடித்து உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தார். அதேமாதிரி, எப்போது இந்திய அணிக்கு எதிராக ஆடினாலும் மிகச்சிறப்பாக ஆடுவார். அதனால் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே ஹெட்டின் விக்கெட்டை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அந்தவகையில், இன்றைய போட்டியில் ஹெட்டை 39 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. இன்றைய போட்டியிலுமே ஹெட் அபாயகரமாகத்தான் ஆடினார். ஷமி, ஹர்திக் என முதல் ஸ்பெல்லை வீசிய இருவரின் ஓவரிலுமே ஹெட் அதிரடியாக ஆடினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஓவரில் மட்டும் 5 பவுண்டரிக்களை அடித்தார். ஷமியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக ஆடுகிறார் என்பதால் ரோஹித் சர்மா சீக்கிரமே ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார். 6 வது ஓவரிலேயே குல்தீப் உள்ளே வந்தார். அவரின் ஓவரிலும் ஹெட் சிக்சரை பறக்கவிட்டார். ஹெட் மீண்டும் ஒரு மிரட்டல் இன்னிங்ஸை ஆடப்போகிறாரோ என தோன்றியது. ஆனால், 9 வது ஓவரில் வருண் உள்ளே வந்தார்.

Head

அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஹெட் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். வருண் ஹெட்டுக்கு வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்தையே இறங்கி வந்து பெரிய சிக்சராக்க முயல்கிறார் ஹெட். ஆனால், லாங் ஆபில் கில்லிடம் கேட்ச் ஆனார். 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஹெட் அவுட். இந்தியாவுக்கான மிகப்பெரிய அபாயம் ஓய்ந்தது.

கடந்த போட்டியில் 5 விக்கெட் ஹாலோடு ஆட்டநாயகன் விருதையும் வருண் வென்றிருந்தார். இந்தப் போட்டியிலும் முதல் ஓவரிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திவிட்டார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article