Varun Chakaravarthy : `என் கதை இன்னும் முடியல' - தோற்றாலும் மீண்டும் எழுந்து ஓடு; வருணின் எழுச்சி

9 months ago 12
ARTICLE AD BOX

'துபாயில் வருண்!'

சாம்பியன்ஸ் டிராபியில் துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ரொம்பவே சராசரியான ஒரு ஸ்கோரை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸ் முடிகையில், இந்திய பௌலர்களுக்குதான் பெரிய சவால் இருக்கப்போகிறது எனப் பேசப்பட்டது. குறிப்பாக, அணியின் ப்ளேயிங் லெவனில் செய்யப்பட்டிருந்த மாற்றத்தை அனைவரும் குறிவைத்து பேசத்தொடங்கினர்.

வருண்

'வருண் தேர்வு சார்ந்த விமர்சனம்!'

ஹர்ஷித் ராணாவை பென்ச்சில் வைத்துவிட்டு வருண் சக்கரவர்த்தியை லெவனுக்குள் எடுத்திருந்தார் ரோஹித். ஏற்கெனவே ஜடேஜா, குல்தீப், அக்சர் என அணிக்குள் 3 ஸ்பின்னர்கள் இருந்தனர். வருண் சக்கரவர்த்தி நான்காவது ஸ்பின்னர். நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு? இந்தியா தவறு செய்துவிட்டதோ எனும் கேள்வியைத்தான் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஒருவேளை போட்டியின் முடிவு இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாமல் போயிருந்தால் தோல்விக்கான மொத்த பழியும் வருணின் தேர்வு மீது விழுந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அழுத்தமிக்க சூழலில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட் ஹாலை எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஆட்டநாயகன் விருதையுன் வருண் சக்கரவர்த்தி வென்றிருக்கிறார்.

'வருணின் ஃப்ளாஸ்பேக்!'

வீழ்கிற எவராலும் மீண்டும் எழுந்து ஓட முடியும் என்கிற நம்பிக்கையை விளையாட்டுகளால்தான் உருவாக்க முடியும். அந்த வகையில் இதற்கு வருண் சக்கரவர்த்தியுமே மிகப்பெரிய உதாரணம். வருண் ஒரு கட்டிக்ட கலை நிபுணர். அதில் பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என நினைக்கிறார். பின்னர் அவருடைய கவனம் அப்படியே சினிமா பக்கமாக திரும்புகிறது. அதிலெல்லாம் கொஞ்ச காலத்தை செலவளித்துவிட்டு தாமதமாகத்தான் கிரிக்கெட் பக்கமாக வருகிறார். இங்கேயும் வந்தவுடனேயே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் மீண்டும் சினிமாவை நோக்கியே செல்கிறார். 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட்டராகவே கூட்டத்தில் ஒருவராக வருவார். அந்த காலக்கட்டத்தில்தான் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடங்கப்படுகிறது. அதில் ஒரு மிஸ்டரி ஸ்பின்னராக சிறப்பாகச் செயல்படவே ஐ.பி.எல் அணிகளின் கவனம் வருணின் மீது விழுகிறது.

Varun Chakravarthy | வருண் சக்கரவர்த்தி

'ஐ.பி.எல் இல் வருண் சக்கரவர்த்தி!'

எப்படி நடராஜனை முதலில் பஞ்சாப் அணி அள்ளிச் சென்றதோ அதேமாதிரி வருணையும் முதலில் பஞ்சாப் அணிதான் கோடிகளை கொட்டி எடுத்தது. 2019 சீசனுக்கு முன்பான ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து பஞ்சாப் அணி அவரை வாங்கியது. ஆனால், அந்த சீசனிலும் அவரால் முழுமையாக ஆடவில்லை. கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில்தான் ஆடியிருந்தார். அடுத்த சீசனுக்கு முன்பாக பஞ்சாப் அணி அவரை விடுவித்தது. ஒரு நல்ல வாய்ப்பை காயத்தால் வருண் இழந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

2020 சீசனுக்கு முன்பாக கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. கொல்கத்தா அணி அவரின் திறமையை உணர்ந்து நல்ல வாய்ப்புகளை கொடுத்தது. கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்தார். அவரும் வருணை சிறப்பாக வழிநடத்தினார். அந்த சீசனில் மட்டும் வருண் 17 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

'இந்திய அணியில் வருண்!'

இந்த சீசன் முடிந்தவுடனேயே ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பயணப்பட்டது. அந்த இந்திய அணியில் வருணும் இருந்தார். ஆனால், காயம் காரணமாக கடைசிக்கட்டத்தில் அவருக்கு பதிலாக நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஒரே தொடரில் மூன்று பார்மட்களிலும் அறிமுகமாகி ஸ்டார் ஆனார் நடராஜன். வருண் தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது. அடுத்த 2021 சீசனில் வருண் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது மீண்டும் இந்திய அணியிலிருந்து அழைப்பு வந்தது. 2021 சீசனின் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்தது. அந்த ஐ.பி.எல் முடிந்தவுடன் அங்கேயே டி20 உலகக்கோப்பையும் நடந்திருந்தது. இதனால் வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

Varun Chakaravarthy

'கொடுங்கனவு!'

ஆனால், அந்தத் தொடர் அவருக்கும் சரி இந்தியாவுக்கு சரி ஒரு கொடுங்கனவாக மாறியது. இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. மூன்று போட்டிகளில் ஆடியும் வருணால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. வருண் 'ஒன் சீசன் வொண்டர்!', ஐ.பி.எல் இல் ஆடினால் இந்திய அணிக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில்தான் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாகவும் அறிவித்தார்கள். இந்த களேபரத்தில் ட்ராப் செய்யப்பட்ட வருணை மறந்தே விட்டார்கள். அவர் தேர்வுக்குழுவின் ரேடாரிலேயே இல்லை. வருண் அவ்வளவுதான் என தோன்றியது. ஆனால், கிடைக்கிற வாய்ப்புகளில் சிறப்பாக ஆடிக்கொண்டே இருந்தார்.

'வருணின் கம்பேக்!'

ஐ.பி.எல் இல் கொல்கத்தா அணிக்கு தொடர்ந்து சராசரியாக 18 விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்துக் கொண்டே இருந்தார். சையத் முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே என உள்ளூர் போட்டிகளிலும் தமிழக அணிக்காக நன்றாக ஆடிக்கொடுத்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வருணுக்கு இந்திய அணியிலிருந்து அழைப்பு வந்தது. இது எழுந்து ஓடுவதற்கான நேரம் என்பதை உணர்ந்த வருண் இந்த முறை வாய்ப்பை தவறவிடத் தயாராக இல்லை. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலுமே சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் நன்றாக ஆடினார். டி20 பௌலராக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவரை இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐயிலும் சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் எடுத்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான்.

சாம்பியன்ஸ் டிராபிக்குள்ளும் அவர் முதல் வாய்ப்பாக பார்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகளை வென்று அரையிறுதியை உறுதி செய்த பிறகுதான் அவருக்கு வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால், அந்த வாய்ப்பின் அருமையை உணர்ந்து வருண் சிறப்பாகச் செயல்பட்டார்.

Varun Chakaravarthy
90 கி.மீக்கு மேல் அவர் வேகமாக வீசிய கூக்ளிக்கள் நியூசிலாந்து பேட்டர்களின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தவில்லை, நான்காண்டுகளுக்கு முன்பு இதே துபாயின் கொடுங்கனவாக நடந்த சம்பவங்களையும் உடைத்தெறிந்தன. விளைவு, 5 விக்கெட் ஹாலை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வருணுக்கு பல சமயங்களில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்த சமயங்களில் சந்தர்ப்ப சூழல்களால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் இருந்திருக்கிறது. ஆனால், எப்போதுமே அவர் சோர்ந்து போனதில்லை. கையில் இருக்கும் வாய்ப்புகளை பற்றிக்கொண்டு இயன்றதைச் செய்துகொண்டே இருந்தார். வருணின் கரியர் மூலம் நமக்கு கிடைக்கும் மெசேஜ் இதுதான், 'எதுவும் முடியல இன்னும் வாய்ப்பிருக்கு மீண்டும் எழுந்து ஓடு!'

Read Entire Article