Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?

6 months ago 7
ARTICLE AD BOX

'ஜெய்ஸ்வால் சதம்...'

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளிலேயே சதமடித்திருக்கிறார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அசத்தலான இன்னிங்ஸ்! தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே பெர்த்தில் சதமடித்திருப்பார். இப்போது தனது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் இன்னிங்ஸிலேயே லீட்ஸில் சதமடித்திருக்கிறார்.

ஜெய்ஸ்வால்ஜெய்ஸ்வால்

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் ஜெய்ஸ்வாலைப் பற்றி, 'இவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்!' என வர்ணித்திருந்தார். அந்தப் பாராட்டுக்கு தகுதியான இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் ஆடியிருக்கிறார். ரோஹித் இல்லை, கோலி இல்லை, விமான நிலையத்தில் இந்திய அணியை வரவேற்க ஆளே இல்லை. நட்சத்திரங்கள் இல்லாமல் இந்த இந்திய அணி சாதிக்குமா? என அத்தனை பதைபதைப்புகள் இந்த தொடருக்கு முன்பாக.

'குழப்பத்தில் கில்!'

எல்லாவற்றையும் ரொம்பவே கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

டாஸ் முடிவில் கில் அத்தனை நம்பிக்கையாக இல்லை. பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்தார். கில், நாங்களும் பந்துவீசவே நினைத்தோம் என விரக்தியை வெளிக்காட்டினார். கில்லின் அதிருப்தியே பேட்டர்களுக்கு ஒருவித ஐயத்தை கொடுத்திருக்கும். அதிலும் குறிப்பாக முதல் ஒரு மணி நேரத்தில் பந்து எப்படி மூவ் ஆகப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் பதற்றமும் இருந்திருக்கும். ஆனால், ஜெய்ஸ்வால் அத்தனை நிதானமாக இருந்தார். பக்குவமாக இன்னிங்ஸை தொடங்கினார்.

Yashaswi JaiswalYashaswi Jaiswal

'பக்குவ ஜெய்ஸ்வால்!'

கிறிஸ் வோக்ஸூம் கார்ஸூம் முதல் ஸ்பெல்லை வீசினர். 135-140 கி.மீ வேகத்தில் சீராக வீசினர். முதல் ஓவரில் ஜெய்ஸ்வால்தான் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். வோக்ஸ் உடம்புக்குள் முதல் பந்தை வீசினார். ஓரளவு ஸ்திரத்தன்மையோடு டிபன்ஸ் ஆடினார். அடுத்து ஒன்றிரண்டு பந்துகள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே. அதையெல்லாம் அப்படியே லீவ் செய்தார். 'இங்கிலாந்தில் எந்த லெந்த் பந்துகளை லீவ் செய்யும் முடிவை எடுக்கிறோம் என்பதுதான் ரொம்பவே முக்கியம்.' என சச்சின் பேசியிருந்தார்.

இந்த விஷயத்தில் ஜெய்ஸ்வால் கெட்டியாக இருந்தார். 4 வது ஸ்டம்ப் லைனில் நல்ல லெந்தில் வந்த பந்துகளை கூட லாவகமாக லீவ் செய்தார். கில் பயந்த அளவுக்கு பிட்ச்சில் எதுவும் இல்லை. பந்து அவ்வளவாக மூவ் ஆகவே இல்லை. இதனால் இங்கிலாந்து பௌலர்களுமே பெரும்பாலும் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாகவும் புல் லெந்திலுமே வீச முயன்றனர். இது ஜெய்ஸ்வாலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ஷாட் ஆடுவதற்கு ஏதுவாக வந்த பந்துகளை அடுத்தடுத்து நல்ல ஷாட்களாக ஆடி பவுண்டரிக்களை அடித்தார். இதனால் ரன்னும் வேகமாக உயர்ந்தது.

Yashaswi JaiswalYashaswi Jaiswal

'எப்படி ஆதிக்கம் செலுத்தினார்?'

ஜெய்ஸ்வால் ஒரு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் பலவீனமாக இருந்தார். லெக் ஸ்டம்ப் லைனில் உடம்புக்குள் வீசிய பந்துகளை டிபன்ஸ் ஆடவும் ஷாட் ஆடவும் தடுமாறினார். இதனால் 3 வழக்கமான ஸ்லிப் + ஒரு லெக் ஸ்லிப் என வைத்து பென் ஸ்டோக்ஸ் அட்டாக் செய்தார். இந்த வகையில் வீசப்பட்ட டெலிவரிகளுக்கு ஜெய்ஸ்வால் நிஜமாகவே கொஞ்சம் தடுமாறினார். ஆனால், இந்த பலவீனத்தை இங்கிலாந்துக்கு சாதகமாக மாறவிடவில்லை.

எப்போதெல்லாம் இந்த மாதிரி தடுமாறினாரோ அதிலிருந்து ஒன்றிரண்டு டெலிவரிகளிலேயே பவுண்டரி அடித்து மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். வோக்ஸூக்கு எதிராக மிட் ஆப் பீல்டரை ஓடவிடும் வகையில், ஒரு அற்புதமான ட்ரைவை ஆடியிருப்பார். அந்த ஒரு ஷாட்டே ஜெய்ஸ்வால் நல்ல டச்சில் இருக்கிறார் என்பதையும் இன்றைக்கு எதோ செய்யப்போகிறார் என்பதையும் காட்டிவிட்டது. ஸ்பின்னரான சோயப் பஷீரின் பந்துகளையும் அட்டாக் செய்தார்.

Yashaswi JaiswalYashaswi Jaiswal

'லீட்ஸ் கொடுத்த மரியாதை!'

சதத்தை நெருங்குகையில் அவரின் கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இரண்டு முறை வலியில் துடித்தார். ஆனாலும் ஓயவில்லை. பிரைடன் கார்ஸ் வீசிய பந்தை பாய்ண்ட்டில் தட்டி விட்டு சிங்கிள் தட்டி வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி தனது 5 வது சதத்தை பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார். பென் ஸ்டோக்ஸ் பந்தில் 101 ரன்களில் ஜெய்ஸ்வால் அவுட் ஆகி வெளியேறும்போது ஒட்டுமொத்த லீட்ஸ் மைதானமும் எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தியது.

'சூப்பர் ஸ்டார்!'

இந்திய அணி ஒரு பரிணாமக் கட்டத்தில் இருக்கிறது. முன்னோர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சங்கிலியை இழுத்துப் பிடித்து இந்திய கிரிக்கெட்டின் சகாப்தத்தை நீட்டிக்க செய்வது இளம் வீரர்களின் பொறுப்பும் கடமையும். இந்திய கிரிக்கெட் எனும் பெரும் மலையை இழுத்துச் செல்ல நான் தயாராகிவிட்டேன் என ஜெய்ஸ்வால் அறிவித்திருக்கும் இன்னிங்ஸ்தான் இது.

Yashaswi Jaiswal : `மும்பையின் குடிசைவாசி டு பெர்த் Standing Ovation!' - எளியவனின் சரித்திர வெற்றி
Read Entire Article