ARTICLE AD BOX

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்தார். போட்டி முடிவடைந்ததும் அவர் கூறியதாவது: முதல் பந்தில் சிக்ஸர் விளாசுவது என்பது எனக்கு சாதாரண விஷயம். நான் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளேன், மேலும் உள்ளூர் அளவிலும் விளையாடியுள்ளேன், அங்கு நான் முதல் பந்தில் சிக்ஸர்களை அடித்துள்ளேன். முதல் 10 பந்துகளை விளையாடும் போது நான் அழுத்தத்துக்கு உள்ளானது இல்லை. என்னை நோக்கி வரும் பந்துகளை அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் தெளிவாக இருப்பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல்லில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

7 months ago
8







English (US) ·