கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?

6 months ago 7
ARTICLE AD BOX

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.

அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர்.

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால்ஜெய்ஸ்வால்

பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்தார்.

அதன்பிறகு, விக்கெட்டை இழக்காத இவ்விருவரும், முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் அணியின் ஸ்கோரை 359 ஆக உயர்த்தினர். அதோடு, கில் சதமும், பண்ட் அரைசதமும் கடந்தனர்.

இவ்வாறிருக்க, கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த கில் மீது ஐ.சி.சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதாவது, நேற்றைய இன்னிங்ஸில் கில் தனது கால்களில் கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடுவது MCC (Marylebone Cricket Club) ஆடைக்கட்டுப்பாட்டு விதியை மீறும் செயலாகும்.

திருத்தப்பட்ட விதி 19.5-ன்படி டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை, கிரீம், வெளிர் சாம்பல் நிற சாக்ஸ் அணிய மட்டுமே வீரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

கேப்டன் சுப்மன் கில்கேப்டன் சுப்மன் கில்

எனவே, கில்லின் செயலுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐ.சி.சி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இறுதி முடிவை எடுப்பார்.

இதில், கில் வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து வந்திருந்தார் எனில் அது முதல்நிலைக் குற்றமாகக் கருதப்பட்டு, போட்டிக் கட்டணத்தில் 10 முதல் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கக்கூடும்.

கேப்டன் சுப்மன் கில்கேப்டன் சுப்மன் கில்

இருப்பினும், வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அவர் அணியவில்லை, பொருத்தமான வெள்ளை நிற அல்லது அனுமதிக்கப்பட்ட நிற சாக்ஸ் தன்னிடம் இல்லாததால் கருப்பு நிற சாக்ஸ் அணிய வேண்டியதாயிற்று எனில் தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதுவரை நடுவர் தரப்பிலிருந்து கில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?
Read Entire Article