"ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான்!"- முனீஸ்காந்த்

1 month ago 2
ARTICLE AD BOX

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களைச் சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர். ரசிகர்கள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்தனர். திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த் ஒரு சவரன் தங்கச் சங்கிலியை பரிசளித்தார். மேலும், திரைப்படத்தின் போஸ்டர்களை பொதுமக்களுக்கு வழங்கி, அனைவரும் திரைப்படம் பார்க்க வர வேண்டும் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று அவர்களிடம் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர்,

director with muneeskanth

"திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு ஊராக திரையரங்கிற்குச் சென்று பார்த்து வருகிறோம். திருச்சியில் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடுவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். பல முக்கிய திரைப்பட விமர்சகர்கள் எங்கள் திரைப்படத்தை விமர்சனம் செய்யாமல் புறக்கணித்துள்ளனர். மலையாளத் திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் எங்கள் படத்தை விமர்சனம் செய்தால், அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற மனநிலையில் விமர்சனம் செய்யாமல் உள்ளனர். பெரிய படத்தை மோசமாக விமர்சனம் செய்தால் அவர்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கின்றார்கள். நல்ல படத்தை விமர்சனம் செய்தால் அவர்கள் பார்வையாளர்கள் குறைகிறார்கள் என்பதால் அவர்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள். எனது அடுத்த திரைப்படத்தில் முனீஸ் காந்த்திற்கு கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரம் கொடுத்து அவரையும் நடிக்க வைப்பேன்" என்றார்.

அடுத்து பேசிய நடிகர் முனீஸ்காந்த்,

"மிடில் கிளாஸ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநரின் பெயர் திரையில் வரும்போது மக்கள் கைதட்டுகிறார்கள். இதுபோன்ற படங்களை ஓ.டி.டி-யில் பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிடாமல் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன். இதே இயக்குநரின் அடுத்த படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அடுத்து, நிறைய படங்களில் நடித்து வருகிறேன். திரைப்படத்திற்கு மதிப்பெண் வழங்குவது வரவேற்கக்கூடியது தான். அதைப் பார்த்து நிறைய பேர் திரையரங்கிற்கு வருவார்கள். இந்த திரைப்படத்தைப் பார்த்து பல இயக்குநர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் கவின் என்னை வாழ்த்தினார்.

director with muneeskanth

இத்திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமி, இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என பேட்டி அளித்துள்ளார். இந்த திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் நிறைய முயற்சி செய்தேன். அந்த இயக்குநரைப் பார்த்து, 'எனக்கு வாய்ப்பு கொடுங்கள்' எனக் கேட்டேன். கூட்டத்தில் நிற்பது மாதிரியாவது ஒரு காட்சி வையுங்கள் எனக் கேட்டேன். அவர் சரி என்று சொல்லி எனக்கு ஒரு கதாபாத்திரமும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ஆனால், நான் வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கமுடியாமல் மிஸ் செய்து விட்டேன். அது, எனக்கு வருத்தம் தான். தனுஷ் அவர்களுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். மாஸ்க் திரைப்படம் ஓடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எங்கள் திரைப்படம் ஓடினாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

அனைத்து படங்களும் ஓட வேண்டும் எங்கள் படமும் ஓட வேண்டும் என்பதுதான் என் ஆசை. நேற்று இயக்குநரின் சொந்த ஊரான மன்னார்குடி சென்றதால், அங்கு குத்தாட்டம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் 15 வருடம் போராடி இந்தத் துறைக்கு வந்தேன். நகைச்சுவையாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுமக்கள் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கிறார்கள். வில்லனாக நாசர் போல், பிரகாஷ்ராஜ் போல் இரண்டு படம் நடித்தால்கூட எனக்குப்போதும். நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு தான் வந்தேன். எனக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லை. நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் மாஸ் ஹீரோ இல்லை. அதற்கு நான் தகுதியானவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

director with muneeskanth

இந்தத் திரைப்படத்தில் நான் ஹீரோ கிடையாது. திரைக்கதை தான் ஹீரோ. இன்று தொழில்நுட்பம் நிறைய வந்துள்ளது. வேறு ஒரு வேலையை கையில் வைத்துக்கொண்டு சினிமாவில் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால், நான் செல்ல மாட்டேன். எனக்கு நிறைய வேலை உள்ளது" என்றார்.

Read Entire Article