ARTICLE AD BOX
தனுஷின் சகோதரி மகன் பவிஷ், தனுஷ் இயக்கியிருந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.
பிப்ரவரி மாதம் அத்திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அதையடுத்து இப்போது அவருடைய இரண்டாவது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் பவிஷ்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இப்படத்தை அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். நேற்றைய தினம் அந்தப் படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் கஸ்தூரி ராஜா இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நடிகர் பவிஷ் தன்னுடைய இரண்டாவது திரைப்படம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.
அவர், “‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில், என் கதாபாத்திரம் மிகவும் அமைதியானதாக இருக்கும். நான் இயல்பாகவே அப்படித்தான் இருப்பேன்.
ஆனால் இந்தப் படத்தில் நான் வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் என்னுடைய உண்மையான கேரக்டரிலிருந்து எதிர்மறையானதாக இருக்கும்.
இந்தக் கேரக்டருக்கு நான் அதிகமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதனால், இது எனக்கு சவாலாக இருக்கும். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திற்குப் பிறகு நான் நிறைய ஸ்கிரிப்ட்களைக் கேட்டேன்.
என்னைச் சுற்றியிருந்த அனைவரும் என்னிடம், ‘முதல் படத்தைவிட இரண்டாவது படம்தான் மிகவும் முக்கியம்’ எனக் கூறினார்கள்.
ஏனெனில் நீங்கள் உண்மையாகவே எப்படியான திறமைகளைக் கொண்டவர் என்பதை மக்கள் பார்க்கும் படம் அதுதான்.
என்னுடைய இரண்டாவது படத்திற்கு தனுஷ் சார் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் இல்லையென்றால், நான் என்னை ஒரு நடிகராகப் பார்த்திருக்க முடியாது. நான் விமர்சனங்களை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன்.
அனைவரும் விமர்சனத்திலிருந்துதான் பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். நானும் அதே போல் கற்றுக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் என் தவறுகளை சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன்.” என முடித்துக் கொண்டார்.

2 months ago
4






English (US) ·