ARTICLE AD BOX
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள்.
அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம்.
Tourist Family reviewதெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை.
இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதோடு, இறுதியில் தாஸின் குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதையும் பேசியிருக்கிறது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.
இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்இறக்கம், அனைவருக்கும் உதவும் குணம், அப்பாவித்தனம் என 'வழக்கமான' சசிக்குமாரின் சாயல் அதிகம் கொண்டிருந்தாலும், விவரிக்க முடியாத வலியைச் சுமக்கும் கண்கள், மகனிடம் உடையும் தருணம், குடும்பத்திற்காகப் பதறும் நிமிடங்கள் போன்றவற்றில் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் சசிக்குமார்.
உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்போடு, ரொமான்ஸ், காமெடி, நடனம் போன்றவற்றாலும் பலம் சேர்த்திருக்கிறார் சிம்ரன்.
மூத்த மகனாக மிதுன் ஜெய் சங்கர், இளமையின் துடிப்போடு, தேவையான இடங்களில் அழுத்தமான நடிப்பையும் வழங்கி கவனிக்க வைக்கிறார்.
சேட்டைகள் நிறைந்த சிறுவன் கமலேஷின் அட்டகாசமான நடிப்பு, பல காட்சிகளில் சிரிப்பலையைப் பரவவிட்டிருக்கிறது.
குறிப்பாக, 'ஜோசப் குருவில்லா' காட்சியிலும், சர்ச் காட்சியிலும் அவரின் குறும்புத்தனத்தால் தியேட்டர் ப்ளாஸ்ட் ஆகிறது!
தான் வரும் எல்லா காட்சியிலும் சிரிப்பு விருந்து வைக்கிறார் யோகி பாபு. எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஶ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், அபிஷன் ஜீவிந்த், யோக லட்சுமி ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால், காட்சிகளை ஆழமாக்கி, படத்திற்கு வலுசேர்க்கிறார்கள்.
வில்லத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக ராம்குமார் பிரசன்னா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.
`Tourist Family' Exclusive: “சிம்ரன் ஜோடி என்பது எனக்கும் ஆச்சர்யம்தான்!” - சசிகுமார் எக்ஸ்க்ளூசிவ்எதார்த்தமான கோணங்கள், ஃப்ரேம்கள், இயல்பான ஒளியமைப்பு என ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.
அதற்கு கலரிஸ்ட் அருண் சங்கமேஷ்வரின் பங்களிப்பும் துணை புரிந்திருக்கிறது.
நிதானமான திரைமொழியோடு, உணர்வுகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜா வரிகளில் 'ஆச்சாலே', 'வாழ்ந்து பாரு', 'இறகே' பாடல்கள் மனதிற்கு இனிமை தருவதோடு, கதையோட்டத்திற்கும் கைகொடுத்திருக்கின்றன.
Tourist Family reviewமுதல் ப்ரேமிலிருந்தே கதை தொடங்கி விடுகிறது. தமிழ்நாட்டு வருகை, குடியிருப்பு வாசிகளுடனான உரையாடல்கள் எனத் திரைக்கதை, மென்மையான நகைச்சுவைகளோடு நிதானமாக நகர்கிறது.
அதனால், தாஸின் குடும்பம் எவ்வித அலட்டலுமின்றி, இயல்பாக மனதில் பதிகிறது.
எக்கச்சக்க கதாபாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை தனித்தனி கதைகளாக அழுத்தமாக எழுதியதோடு, அவற்றுக்குப் பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது திரைக்கதையை ஆழமாகியிருக்கிறது.
Tourist Family: `அக் 31-ம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' - மேடையில் காதலை தெரிவித்த இயக்குநர்அதீத நல்ல மனிதராக தாஸ் வருவதோடு, அடுக்கடுக்கான நெகிழ்ச்சியான காட்சிகளும் வருவது என்றாலும் அவை திகட்டிவிடாத வகையில் சின்ன சின்ன திருப்பங்கள், தருணங்கள், காமெடி பன்ச் போன்றவற்றைக் கடைசியில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.
'மலையூரு நாட்டாமை' பாடல் காட்சி, இளங்கோ குமரவேல் - ஶ்ரீஜா ரவி ஜோடியின் காட்சிகள், யாழ்ப்பாணத் தமிழைத் தெருக்காரர்கள் கற்றுக்கொள்ளும் காட்சிகள், மிதுன் - குறள் காதல் காட்சி, இறுதிக்காட்சியில் நடக்கும் ட்விஸ்ட்கள் எனப் பல இடங்களும், தொகுப்புகளும் உணர்வுப்பூர்வமாக மனதைக் கனக்க வைக்கின்றன.
Tourist Family review"ஏற்கெனவே கடல் தாண்டிதான் வந்திருக்க!", "இந்தத் தமிழ் பேசறது பிரச்னையா, இல்ல நாங்க தமிழ் பேசறதே பிரச்னையா?" என அரசியல் பேசும் வசனங்கள் பிரசாரத் தன்மையின்றி காட்சியோடு இயைந்திருப்பது பாராட்டத்தக்கது.
தாஸ் குடும்பத்தின் தினசரி வாழ்க்கை - அதே குடும்பத்தைத் தேடும் போலீஸ் என இரு லைனில் திரைக்கதை நகர்ந்தாலும், போலீஸ் தேடுதலை விறுவிறுப்பாக்கத் தவறுவதால், இறுதிக்காட்சியில் வர வேண்டிய பதைபதைப்பில் சிறிது பற்றாக்குறை ஏற்படுகிறது.
எந்த ஆவணமுமில்லாமல் குடியேறியவர்களை எப்படி போலீஸ் முதல் அண்டை வீட்டார் வரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி படம் முழுவதும் தொக்கி நிற்கிறது.
இப்படி ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை, எமோஷனல் காட்சிகளால் மறைத்திருக்கிறது திரைக்கதை.
காவல் நிலைய மரணத்தை இறுதிக்காட்சியில் பயன்படுத்திய விதமும் நெருடலைத் தருகிறது.
போர்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் ஆவணமற்ற குடியேற்றங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், அவர்களை அரசுகள் மனிதநேயமற்று நடத்தும் முறைகளுக்கு எதிராக உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இச்சூழலில் இக்கதையை எடுத்துக்கொண்டு, அதன் ஆன்மா சிதறாமல், அழகாகப் பேசியதற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.
Tourist Family reviewபடத்தின் மொழியில் சொல்லவேண்டுமென்றால்...
"பழையகால வாழ்க்கைய நினைச்சுக்கொண்டு, எனியாவது ஏதாவது நல்லது நடக்காதா என்டிற எதிர்பார்ப்பில உலகம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற அகதிகளின்ர குரலையும், அவையளுக்கும் - சக மனிசருக்கும் இந்த மனிதம் குடுக்கிற நம்பிக்கையையும் நல்ல ஆழமாக் கதைக்கிற முறையில இந்தப் படம் பாராட்டப்பட வேண்டிய ஒண்டுதான்!"
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8






English (US) ·